மத்திய பட்ஜெட்: ஆதரவும்... எதிர்ப்பும்...


மத்திய பட்ஜெட் குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

விருதுநகர்

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்த மத்திய பட்ஜெட் எப்படி? என்பது குறித்து பொருளாதார நிபுணர்களும், பொதுமக்களும் தங்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.அதன் விவரம் வருமாறு:-

நம்பிக்கை தரும் பட்ஜெட்

விருதுநகர் வியாபார தொழில்துறை சங்க செயலாளர் இதயம் முத்து:-

மத்திய நிதி மந்திரி பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாக இருக்கும் என்று நம்பிக்கை தந்துள்ளதுடன் அதற்கேற்ற வகையில் அனைத்து தரப்பினருக்கும் நம்பிக்கை தரும் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு வரி விதிப்பு வரம்பை ரூ.2 கோடியில் இருந்து ரூ.3 கோடியாக உயர்த்தி உள்ளது வரவேற்கத்தக்கது. கலால் வரியை 21 சதவீதத்தில் இருந்து 13 சதவீதமாக குறைத்துள்ளதும் வரவேற்கத்தக்கது. மேலும் தனிநபர் வருமான வரி விதிப்பு வரம்பை ரூ. 5 லட்சத்திலிருந்து ரூ. 7 லட்சம் ஆக உயர்த்தி உள்ளதும், வரி விதிப்பு விகிதத்தில் சலுகைகள் வழங்கி உள்ளதும் பாராட்டத்தக்கது. மொத்தத்தில் விவசாயிகள், சிறு தொழில் முனைவோர், தொழில் முனைவோர் என அனைத்து தரப்பினருக்கும் வாய்ப்பு அளிக்க கூடிய வகையில் இந்த பட்ஜெட் அமைந்துள்ளது.

வரவேற்பு

விருதுநகர் சிறு தொழில் முனைவோர் சங்க தலைவர் கே.சி.குருசாமி:-

சிறு, குறு தொழில் முனைவோருக்கு வரி விதிப்பு வரம்பை ரூ.2 கோடியில் இருந்து ரூ. 3 கோடியாக உயர்த்தி உள்ளது வரவேற்கத்தக்கது. மேலும் கொரோனா காலத்தில் மத்திய அரசுடன் பல்வேறு நிலைகளில் ஒப்பந்தம் செய்துள்ள சிறு தொழில் முனைவோருக்கு ஒப்பந்தபடியான தொகையினை திருப்பித் தர முடிவெடுத்துள்ளதும், சிறு, குறு தொழில் முனைவோருக்கு மிகுந்த பயன் அளிக்கக் கூடியதாகும். மேலும் கலால் வரி விகிதத்தை குறைத்து இருப்பது, தனிநபர் வருமான வரி உச்சவரம்பை உயர்த்தி உள்ளது, இயற்கை விவசாயத்திற்கு விவசாயிகளை ஊக்குவிக்க நடவடிக்கை எடுத்துள்ளது, முதியோர் வைப்புத் தொகை வரம்பை உயர்த்தி உள்ளது போன்ற பல்வேறு சலுகைகள் அளித்து இருப்பது வரவேற்கத்தக்கதாகும்.

சிறுசேமிப்பு திட்டம்

தாயில்பட்டி நடுத்தெருவை சேர்ந்த இல்லத்தரசி கார்த்திகா தேவி:-

நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த எங்களுக்கு வீடு கட்டுவது கனவாக இருந்தது. தற்போது மத்திய அரசு பிரதமர் குடியிருப்பில் வீடுகள் கட்ட நிதி ஒதுக்கீடு செய்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இதனால் சொந்த இல்ல கனவு நிறைவேற போகிறது.

மேலும் மகளிருக்கு சிறுசேமிப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால் சுயதொழில் செய்யும் எங்களுக்கு உதவியாக இருக்கும். இதனால் சுயமாக தொழில் செய்யும் என்னை போன்ற தொழில் முனைவோருக்கு ஊக்கமாக இருக்கும். இதற்கு மத்திய அரசுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

வருமான வரி உச்ச வரம்பு

அருப்புக்கோட்டை நகராட்சி இளநிலை உதவியாளர் கிருஷ்ணமூர்த்தி:-

மத்திய பட்ஜெட்டில் வருமான வரி உச்சவரம்பு உயர்த்தப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. வருமான வரி உச்சவரம்பை உயர்த்த வேண்டும் என நடுத்தர மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

இது நடுத்தர மக்களுக்கு இனிக்கும் செய்தியாக உள்ளது. இதனால் நடுத்தர மக்கள் பயன்பெறுவார்கள். வருமான வரி விலக்கு தொடர்பான சலுகையை எதிர்பார்த்து காத்திருந்த சம்பளதாரர்களுக்கு இதனால் ஆறுதல் கிடைத்துள்ளது.

பணம் முதலீடு

ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த ஆடிட்டர் அப்துல் நாசர்:- மத்திய அரசின் பட்ஜெட் வரவேற்கத்தக்கது. வருமான வரி உச்சவரம்பு ரூ. 5 லட்சத்தில் இருந்து ரூ. 7 லட்சம் வரை உயர்த்தப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. நடுத்தர மக்கள் வாழ்வாதாரத்தை உயர்த்தக்கூடிய பட்ஜெட் ஆகும். சிறு, குறு தொழில்களை ஊக்குவிக்கும் அளவில் இந்த பட்ஜெட் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் நடுத்தர மக்கள், ஓய்வூதியர்கள் தங்களது பணத்தை சேமிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்யும் போது திடீரென மிகுந்த பண இழப்பு ஏற்படுகிறது. இதனால் பணத்தை முதலீடு செய்பவர்கள் மிகுந்த கஷ்டத்திற்கு உள்ளாகின்றனர். நடுத்தர மற்றும் ஓய்வூதிய பலன்பெறும் மக்களுக்கு பண பாதுகாப்பையும், சேமிக்கும் பணத்தை பாதுகாக்கும் விதத்தில் முதலீடு செய்யும்போது பொதுத்துறை நிறுவனங்களை மத்திய அரசு பாதுகாக்க வேண்டும்.

விவசாய கடன்

விவசாய சங்க மாவட்ட செயலாளர் சவுந்தரபாண்டியன்:-

நாட்டின் முதுகெலும்பான விவசாயத்தை ஊக்குவிக்க வேளாண்துறை மூலம் ரூ.20 லட்சம் கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மத்திய பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஒரு பக்கம் வரவேற்கப்பட்டாலும் விவசாயிகளுக்கு இன்னும் மத்திய அரசு கூடுதலாக இந்த பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

இருந்தாலும் இது விவசாயிகளுக்கு போதுமானதாக அமையுமா என்ற சந்தேகமும் எழுகின்றது. இந்த பட்ஜெட் தாக்கலில் அறிவித்தவாறு மத்திய அரசு விவசாயிகளுக்கு அதனை செயல்முறை படுத்த வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கை.

வருமான வரி

ராஜபாளையத்தை சேர்ந்த உதவி பேராசிரியை சுவாதி:- விவசாயிகளை பாதுகாக்க பட்ஜெட்டில் எதுவும் இல்லை. மாநில சட்டசபை தேர்தல்களுக்கான பட்ஜெட் இது. ஏழை, எளிய மக்களுக்கான திட்டங்கள் எதுவும் பட்ஜெட்டில் இல்லை. வேலைவாய்ப்பு, 100 நாள் வேலை திட்டம் குறித்து எதுவுமே இல்லை. ஏமாற்றமளிக்கும் பட்ஜெட் இது.

விவசாயிகள், இளைஞர் நலன் பற்றி எதுவும் இல்லை. வருமான வரி செலுத்துவதில் அரசு இரண்டு வழி முறைகளை கையாள்கிறது. ஒன்று பழைய முறையில் வருமான வரி செலுத்துவது, மற்றொன்று புதிய முறை. இதில் புதிய முறைக்கு ரூ.7 லட்சம் வரிவிலக்கு வழங்கப்பட்டுள்ளது.

பழைய முறையிலான வருமான வரி செலுத்தும் திட்டத்திற்கு ரூ.3 லட்சம் மட்டுமே வரி விலக்கு வழங்கப்பட்டுள்ளது. பழைய முறையே பெரும்பாலானவர்கள் பயன்படுத்தினர். மேலும் இந்த இரண்டு முறையிலும் வரி செலுத்துவதில் வழங்கப்படும் சேமிப்புக்கான உச்ச வரம்பு உயர்த்தப்படவில்லை. இந்த சேமிப்புக்கான உச்ச வரம்பு உயர்த்தப்பட்டிருந்தால் நாட்டில் வழங்கப்படும் சேமிப்பு திட்டங்களில் கூடுதலான வரவு அதிகரித்திருக்கும்.

வேலை வாய்ப்பு

ஏழாயிரம் பண்ணை நாடார் மகமை பெண்கள் உயர்நிலைப்பள்ளி ஆசிரியை சாந்தி:-

நீண்ட வருடங்களுக்கு பிறகு வரிச்சலுகை கிடைத்துள்ளது மகிழ்ச்சி. இதன் மூலம் தேவைகளை பெருக்கிக் கொள்ள முடியும். தொலைநோக்கான பட்ஜெட் ஆக அமைந்துள்ளது. வருகிற ஆண்டுகளில் இந்தியா தன்னிறைவு பெறுவதற்கு வாய்ப்புள்ளது.

புதிய நர்சிங் கல்லூரி பற்றி அறிவிப்பினால் செவிலியர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இதனால் மருத்துவமனைகளில் வேலை வாய்ப்பு அதிக அளவில் கிடைக்க வாய்ப்புள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story