மத்திய நிதி மந்திரி அதிகாரியை மிரட்டியது தவறானது தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு
மத்திய நிதி மந்திரி அதிகாரியை மிரட்டியது தவறானது என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டி உள்ளார்.
நாகர்கோவில்,
மத்திய நிதி மந்திரி அதிகாரியை மிரட்டியது தவறானது என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டி உள்ளார்.
கே.எஸ்.அழகிரி பேட்டி
கன்னியாகுமரியில் இருந்து வருகிற 7-ந் தேதி காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பாதயாத்திரையை தொடங்குகிறார். இந்திய ஒற்றுமை நடை பயணம் என்ற பெயரில் இந்த யாத்திரை நடக்கிறது.
இதுதொடர்பாக நாகர்கோவிலில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
தமிழ்நாட்டுக்கு பெருமை
ராகுல்காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை 3,500 கி.மீ. தூரத்தை 150 நாட்களில் நடந்தபடி கடக்கிறார். நடைபயணத்தின் முக்கிய நோக்கம், இந்திய மக்களை ஒன்றிணைக்க வேண்டும் என்பது தான். சுதந்திர போராட்ட காலத்தில் இந்திய மக்கள் சாதி, மதம், மொழியை கடந்து ஒன்றாக இருந்தார்கள். ஆனால் ஆர்.எஸ்.எஸ் கொள்கை சமீப காலமாக மக்களிடையே வெறுப்புணர்வை தோற்றுவித்துள்ளது. வெறுப்பு பேச்சுக்கள் எங்கு பார்த்தாலும் பரவிக்கிடக்கின்றன.
ஆனால் ராகுல்காந்தி ஒற்றுமையை வலியுறுத்தும் விதமாக தமிழகத்தில் இருந்து இந்த பயணத்தை தொடங்குகிறார். இது தமிழக காங்கிரசுக்கும், தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்க்கக்கூடிய விஷயம்.
நிதி மந்திரி மீது குற்றச்சாட்டு
நாட்டின் பொருளாதாரம் எவ்வளவு வீழ்ந்து கிடக்கிறது என்பது உங்களுக்கு தெரியும். இப்படி எல்லாத்துறையிலும் மத்திய அரசு தோல்வி அடைந்துள்ளது.
தெலுங்கானாவில் மத்திய நிதி மந்திரி, அதிகாரியை மிரட்டிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. எல்லா திட்டத்திலும் பிரதமர் படத்தை போட வேண்டும் என்ற முறை எதுவும் கிடையாது. பெரிய நிகழ்ச்சியாக இருந்தால், வெறும் மத்திய அரசு திட்டமாக மட்டும் இருந்தால் பிரதமர் மோடியின் படத்தையும் சேர்த்து வைக்கலாம். ஆனால் இது வெறும் மத்திய அரசு திட்டம் மட்டும் அல்ல.
மாநில அரசு கையில் தான் நிர்வாகம் இருக்கிறது. நிதி மந்திரி என்ன செய்திருக்கலாம் என்றால், மாநில அரசுக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கலாம். இனிமேல் வருங்காலத்தில் இப்படி செய்தால் நன்றாக இருக்கும் என்று கடிதம் எழுதி இருக்கலாமே ஒழிய, மாவட்ட கலெக்டரை அந்த மாநிலத்தில் போய் நேருக்கு நேராக மிரட்டுவது என்பது தவறான விஷயம், இது நல்ல மரபு கிடையாது. முதல்-அமைச்சர் தைரியமாக எதிர்வினையாற்றி இருந்தால் நிலைமை வேறு மாதிரி போய்இருக்கும்.
சமூக புரட்சி
கேரளாவில் நடந்த தென்மாநில கவுன்சில் கூட்டத்தில் தமிழக முதல்-அமைச்சர் கூறிய கருத்துக்கள் மிகவும் சரியானது தான். ராகுல்காந்தி நடைபயண நேர விவரத்தை நாளை (அதாவது இன்று) வெளியிடுவோம். மத்திய அரசு எதையும் ஜனநாயக ரீதியாகவோ, கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையிலோ நோக்குவது கிடையாது. மோடி அவ்வளவு பெருந்தன்மையானவர் அல்ல.
அதற்காக நாம் சொல்லாமல் இருக்க முடியாது. திரும்ப, திரும்ப சொல்ல வேண்டும். போராட வேண்டும். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையில் ராகுல்காந்தி மேற்கொள்ளும் நடைபயணம் சமூக புரட்சியாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.