பா.ஜனதா நிர்வாகிகள் கூட்டத்தில் மத்திய இணை மந்திரி வி.கே.சிங் பேச்சு


பா.ஜனதா நிர்வாகிகள் கூட்டத்தில் மத்திய இணை மந்திரி வி.கே.சிங் பேச்சு
x

எதிர்கட்சிகளின் முயற்சியை உடைத்து 3-வது முறையாக ஆட்சி அமைக்க கடுமையாக உழைக்க வேண்டும் என பா.ஜனதா நிர்வாகிகள் கூட்டத்தில் மத்திய இணை மந்திரி வி.கே.சிங் பேசினார்.

கன்னியாகுமரி

தக்கலை,

எதிர்கட்சிகளின் முயற்சியை உடைத்து 3-வது முறையாக ஆட்சி அமைக்க கடுமையாக உழைக்க வேண்டும் என பா.ஜனதா நிர்வாகிகள் கூட்டத்தில் மத்திய இணை மந்திரி வி.கே.சிங் பேசினார்.

நிர்வாகிகள் கூட்டம்

தக்கலை அருகே உள்ள குமாரகோவில் சந்திப்பில் ஒரு தனியார் திருமண மண்டபத்தில் பா.ஜனதா மாவட்ட சமூக ஊடக பிரிவு நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் அருண்குமார் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு விருந்தினராக மத்திய இணை மந்திரியும், கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளருமான வி.கே.சிங் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

சமூக ஊடகங்கள் மிகவும் வலிமையானது. அதன் மூலம் நம் கருத்துக்களை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். கர்நாடகா தேர்தலில் பா.ஜனதா மீது 40 சதவீத ஊழல் என்ற குற்றசாட்டை பத்திரிகையும், சமூக ஊடகங்களும் சொன்னது. அதை திரும்ப திரும்ப சொன்னதால் சாதாரண மக்களும் நம்பினார்கள். அதை கடைசி நேரத்தில் நம்மால் உடைக்க முடியவில்லை. காரணம் அதற்கு முன்னே சமூக ஊடகங்கள் பரப்பிவிட்டன. இதனால் நாம் தேர்தலில் தோல்வியடைந்து விட்டோம். இதை நாம் உணர்ந்து செயல்பட வேண்டும்.

நாடாளுமன்றத்தில் செங்கோல்

சமூக ஊடகங்கள் மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்த கூடியது. அதை நாம் சரியாக பயன்படுத்தினால் வெற்றியை பிடிக்க முடியும். 1947-ல் ஆதீனங்கள் நேருவிடம் செங்கோலை வழங்கினார்கள். அந்த செங்கோலை நாடாளுமன்றத்தில் வைக்காமல் அருங்காட்சியகத்தில் வைத்து விட்டார்கள்.

ஆனால் இன்று ஆதீனங்களால் கொடுக்கப்பட்ட செங்கோலை நம் பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் வைத்துள்ளார். இதை மக்களிடம் தெரியப்படுத்த வேண்டும்.

3-வது முறையாக...

எதிர்கட்சிகள் நமக்கு எதிரான கருத்துகளை பரப்புகிறார்கள். 3-வது முறை நாம் ஆட்சிக்கு வருவதை தடுப்பதற்காக அவர்கள் செயல்படுகிறார்கள். அதை நாம் உடைத்து 3-வது முறையாக ஆட்சிக்கு வர கடுமையாக உழைக்க வேண்டும். சமூக ஊடக பிரிவை பூத் அளவில் கொண்டு போக வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் ஊடக பிரிவு மாநில துணைத்தலைவர் பாலாஜி, பா.ஜனதா மாநில செயலாளர்கள் சுமதி வெங்கடேசன், மீனாதேவ், மாவட்ட தலைவர் தர்மராஜ், கோட்ட பொறுப்பாளர் கிருஷ்ணன், துணைத்தலைவர் குமரி ப.ரமேஷ், பொதுச்செயலாளர் வினோத், செயலாளர் உண்ணிகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story