ஒன்றியக்குழு உறுப்பினர்களுக்கும் மாதம் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும்
நகராட்சி கவுன்சிலர்களுக்கு போன்று ஒன்றியக்குழு உறுப்பினர்களுக்கும் மாதம் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என குடியாத்ததம் ஒன்றியக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
ஒன்றியக்குழு கூட்டம்
குடியாத்தம் ஒன்றியக்குழு கூட்டம் ஒன்றியக்குழு தலைவர் என்.இ.சத்யானந்தம் தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் கே.கே.வி.அருண்முரளி, மாவட்ட ஊராட்சிகுழு உறுப்பினர் உத்தரகுமாரி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் எம்.கார்த்திகேயன், ஆர்.திருமலை, பொறியாளர் குகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அலுவலக மேலாளர் அசோக்குமார் வரவேற்றார்.
கூட்டத்தில் உறுப்பினர்கள் பேசியதாவது:-
ரஞ்சித்குமார்:-
குடியாத்தம் ஒன்றியத்துக்குட்பட்ட பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும். உள்ளி ஊராட்சி கம்மவார்பட்டி முதல் உள்ளி மேம்பாலம் வரை சாலை அமைத்து தரவேண்டும். தாழையாத்தம் பஞ்சாயத்து முதல் அனங்காநல்லூர் வரை சாலையை அகலப்படுத்த வேண்டும்.
மாதம் ரூ.5 ஆயிரம்
குட்டிவெங்கடேசன்:- தற்போது டெங்கு பாதிப்பு பல இடங்களில் உள்ளது. எனவே முன்னேற்பாடுகளை தவிரப்படுத்த வேண்டும். அதற்கு தேவையான நிதி ஒதுக்க வேண்டும். தமிழக அரசு நகர மன்ற உறுப்பினர்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் வழங்கியது போன்று ஒன்றியக் குழு உறுப்பினர்களுக்கும் மாதம் ரூ.5 ஆயிரம் வழங்க தீர்மானம் கொண்டு வர வேண்டும்.
மனோகரன்:- ஊராட்சி தலைவர் மற்றும் ஊராட்சி செயலாளர்கள் எந்தவித தகவல்களையும் ஒன்றியகுழு உறுப்பினர்களுக்கு தெரிவிப்பதில்லை மதிப்பதும் இல்லை எந்த தகவலும் சொல்வதில்லை.
துணைத் தலைவர் அருண்முரளி:- ஊராட்சிகளில் வீட்டுமனை பிரிவுகளுக்கு உரிய அங்கீகாரம் வழங்குவது போன்று ஒன்றியக்குழு கூட்டத்திலும் அனுமதி வழங்க தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
சுத்திகரிப்பு எந்திரம்
ஆனந்தி நித்தியானந்தம்:- கொத்தகுப்பம் பகுதியில் குடிநீரில் உப்புத்தன்மை அதிகமாக உள்ளது. எனவே குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம் அமைக்க வேண்டும். முன்னாள் ராணுவ வீரர்களுக்கு வீட்டு வரி, குடிநீர் வரி உள்ளிட்டவைகளை ரத்து செய்ய வேண்டும்.
தீபிகாபரத்:- கள்ளூர் கிராமத்தில் பழுதடைந்துள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அகற்ற பல மாதங்களாக வலியுறுத்தியும் நடவடிக்கை இல்லை.
பிரியா:- வளத்தூர் ஏரிக்கரைமேல் செல்லும் சாலை மிகவும் பழுதடைந்துள்ளது. அதனை உடனடியாக சீர் செய்ய வேண்டும்.
இவ்வாறு பேசினர்.
தலைவர் பதில்
உறுப்பினர்களின் கோரிக்கைகளுக்கு பதில் அளித்து பேசிய தலைவர் என்.இ.சத்யானந்தம் உறுப்பினர்கள் கொண்டு வந்த அனைத்து தீர்மானங்களும் ஏற்கப்படுகிறது. ஊராட்சிகளில் வீட்டுமனைகள் அமைக்க உரிய அனுமதி வழங்க ஒன்றிய குழுவிற்கு அதிகாரம் வழங்கக்கோரி அரசுக்கு தீர்மானம் அனுப்பி வைப்போம். ஊராட்சி மன்ற தலைவர்கள் ஒன்றிய குழு உறுப்பினர்களை அலோசிக்காமல் பல இடங்களில் தன்னிச்சையாக நடப்பதாக வந்த தகவல்கள் குறித்து கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம் அமைக்க உரிய இடம் இருந்தால் அமைத்து தர நடவடிக்கை எடுக்கப்படும். ஊராட்சிகளில் நடைபெறும் பணிகள் குறித்து ஒன்றியகுழு உறுப்பினர்களுக்கு தெரிவிக்க ஊராட்சி செயலாளர்களுக்கு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மூலம் அறிவுறுத்தப்படும் என்றார். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.