அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு மாத ஊதியம் நிர்ணயிக்கக்கோரி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினர் தீர்மானம்
அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு மாத ஊதியம் ரூ.21 ஆயிரம் நிர்ணயிக்கக்கோரி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினர் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.
மே தினத்தை முன்னிட்டு கரூர் மாவட்ட அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வெண்ணைமலை பகுதியில் கொடியேற்றும் விழாவும் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து கரூரில் தொழிற்சங்கங்களின் கூட்டம் நடைபெற்றது. இதற்கு தலைவர் தங்கவேல் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் ராஜசேகர் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் மத்திய அரசின் தொழிலாளர் சட்ட தொகுப்பை முற்றிலும் கைவிடக்கோரி மாநில சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும். 2022-ல் அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியத்தில் கொண்டு வந்த சுற்றறிக்கையை முற்றிலும் நீக்கி, விதவை உதவித்தொகை பெறக்கூடிய பெண் தொழிலாளி, நலவாரிய தொழிலாளர் ஓய்வூதியத்தை தவிர, தொழிலாளியின் பிள்ளைகள் கல்வி உதவி, திருமண உதவி, இயற்கை மரணம், விபத்து மரணத்திற்கான நிதி கிடைத்திட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அனைத்து அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்சம் மாத ஊதியம் ரூ.21 ஆயிரம் நிர்ணயிக்கப்பட வேண்டும். 60 வயது பூர்த்தியடைந்த அனைத்து அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும் எவ்வித நிபந்தனையும் இன்றி மாத ஓய்வு ஊதியம் ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும். உழைக்கும் மக்கள் அனைவருக்கும் இ.எஸ்.ஐ. மற்றும் ஓ.எஸ்.எச். கிடைத்திட மத்திய, மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.