காந்திகிராம பல்கலைக்கழக துணை வேந்தராக குர்மீத்சிங் பொறுப்பேற்பு


காந்திகிராம பல்கலைக்கழக துணை வேந்தராக குர்மீத்சிங் பொறுப்பேற்பு
x

காந்திகிராம பல்கலைக்கழக துணை வேந்தராக குர்மீத்சிங் பொறுப்பேற்றார்.

திண்டுக்கல்

திண்டுக்கல்லை அடுத்துள்ள காந்திகிராம பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக இருந்த மாதேஷ்வரன், கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் ராஜினாமா செய்தார். இதனைத்தொடர்ந்து பல்கலைக்கழக வேளாண்மை துறை மூத்த பேராசிரியர் ரங்கநாதன் பொறுப்பு துணை வேந்தராக நியமிக்கப்பட்டார்.

மேலும் காந்திகிராம பல்கலைக்கழகத்திற்கு புதிய துணை வேந்தரை தேர்வு செய்ய பீகார் மத்திய பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் எச்.சி.எஸ்.ரத்தோர் தலைமையில் 3 பேர் கொண்ட தேடுதல் குழுவை கடந்த 3-ந்தேதி மத்திய அரசு அறிவித்தது. இதற்கிடையே கடந்த 6-ந்தேதி பொறுப்பு துணை வேந்தராக இருந்த ரங்கநாதனை அந்த பொறுப்பில் இருந்து மத்திய உயர்கல்வி துறை விடுவித்தது. மேலும் அடுத்து 6 மாத காலம் அல்லது புதிய துணை வேந்தரை நியமிக்கும் வரை காந்திகிராம பல்கலைக்கழக துணை வேந்தராக புதுச்சேரி பல்கலைக்கழக துணை வேந்தர் குர்மீத் சிங் கூடுதல் பொறுப்பாக நியமிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து புதுச்சேரி பல்கலைக்கழக துணை வேந்தர் குர்மீத் சிங் இன்று காந்திகிராம பல்கலைக்கழகத்துக்கு வந்தார். அப்போது அவர் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக (கூடுதல் பொறுப்பு) பொறுப்பேற்றுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியின்போது முன்னாள் பொறுப்பு துணை வேந்தர் ரங்கநாதன், பொறுப்பு பதிவாளர் முரளிதரன் மற்றும் துறை தலைவர்கள் உடனிருந்தனர்.Next Story