அமைப்புசாரா தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
விழுப்புரத்தில் அமைப்புசாரா தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடந்தது.
விழுப்புரம்;
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே அமைப்புசாரா தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் சக்கரவர்த்தி தலைமை தாங்கினார். துணைத்தலைவர் துரை, உப்பு தொழிலாளர் சங்க நிர்வாகி மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கட்டுமான தொழிலாளர் பஞ்சாயத்து சங்க அகில இந்திய துணை செயலாளர் கீதா, அமைப்புசாரா தொழிலாளர் சங்க மாநில செயலாளர் ஜெயபால் ஆகியோர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். தொழிலாளர்- தொழிற்சங்கங்களின் உரிமைகளை பறித்து நலவாரியங்களை கலைக்கும் மத்திய அரசின் தொகுப்பு சட்டங்களை திரும்ப பெற வேண்டும், பெட்ரோல்-டீசல், உணவுப்பொருட்கள் மற்றும் சிமெண்ட், மணல், கம்பி போன்ற கட்டுமான பொருட்களின் விலைவாசி உயர்வு, ஜி.எஸ்.டி. வரி உயர்வு ஆகியவை கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்ட பொருளாளர் தமிழ்மணி, துணை செயலாளர் ஜோதி, நிர்வாகிகள் கமலா, வெங்கடேசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.