செயல்படாத சிக்னல்களால், தீராத போக்குவரத்து சிக்கல்கள்
திண்டுக்கல்லில் செயல்படாத சிக்னல்களால், தீராத போக்குவரத்து சிக்கல்கள் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
உணவு, உடை, உறைவிடம் ஆகியவை ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் முக்கிய தேவை இருக்கிறது. இந்த பட்டியலில் வாகனமும் புதிதாக இணைந்து கொண்டது.
"வாகனம் இல்லாத மனிதன் வாழவே முடியாது" என்று கூறும் அளவுக்கு அதன் பயன்பாடு அதிகரித்து விட்டது.
வாகனங்களின் பெருக்கம்
ஒரு காலத்தில் வசதி படைத்தவர்களுக்கு மட்டுமே வசமாகி இருந்த வாகனங்கள் இன்று அனைத்து தரப்பினருக்கும் உறவாகி விட்டது. வெளியூர் பயணத்துக்கு மட்டுமே வாகனத்தை பயன்படுத்திய காலம் மாறி, பக்கத்து தெருவுக்கு செல்வதற்கும் கூட வாகனம் தேவை என்ற நிலை உருவாகி இருக்கிறது. வேலை, பயணம், பொழுதுபோக்கு என எதுவானாலும் வாகனம் இல்லாமல் எதுவும் இல்லை என்றாகிவிட்டது.
இதனால் ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தபட்சம் ஒரு மோட்டார் சைக்கிளாவது இருக்கிறது. அந்த அளவுக்கு அனைவரின் வாழ்விலும் வாகனங்கள் முக்கிய அங்கம் வகிக்கிறது. எனவே வாகனங்களின் பெருக்கம் அதிகரித்து, நகரின் அனைத்து சாலைகளிலும் வாகன அணிவகுப்பை பார்க்க முடிகிறது. இதற்கு பூட்டு நகரான திண்டுக்கல்லும் விதிவிலக்கல்ல.
அணிவகுக்கும் வாகனங்கள்
திண்டுக்கல்லில் பஸ், லாரி, வேன், கார், மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டர், மொபட் என தினமும் சுமார் 2 லட்சம் வாகனங்கள் வலம் வருகின்றன. இதனால் ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற நாட்களில் காலை 8 மணிக்கு தொடங்கி இரவு 9 மணி வரை நகரில் அனைத்து சாலைகளிலும் வாகனங்கள் அணிவகுத்து செல்கின்றன.
அதிலும் மக்கள் பரபரப்பாக இயங்கும் காலை, மாலை நேரங்களில் வாகன போக்குவரத்து அதிகமாக காணப்படுகிறது. பள்ளி-கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள், அவர்களை அழைத்து செல்லும் பெற்றோர், வேலைக்கு செல்வோர், காய்கறிகளை மார்க்கெட்டுக்கு கொண்டு வரும் விவசாயிகள், அதை வாங்க வரும் பொதுமக்கள் என அனைவரும் ஒரே நேரத்தில் வாகனத்தில் பறக்கின்றனர்.
இந்த ஒருசில மணி நேரத்தில் ஒருசில சாலைகளை கடந்து செல்வதற்குள் போதும், போதும் என்றாகி விடுகிறது. அதிலும் முக்கிய சாலைகளின் சந்திப்பு, ரவுண்டானா பகுதிகளில் முந்தி செல்ல முயலும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
செயல்படாத சிக்னல்கள்
போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் போக்குவரத்து போலீசார் ஈடுபடுகின்றனர். இதுதவிர திண்டுக்கல் நகரில் நாகல்நகர், நேருஜிநகர், கல்லறை தோட்டம், வாணிவிலாஸ், பெரியார் சிலை, பேகம்பூர், எம்.வி.எம். கல்லூரி ஆகிய இடங்களில் போக்குவரத்து சிக்னல்களும் இருக்கின்றன.
இதில் வாணிவிலால் பகுதியில் மட்டுமே தற்போது போக்குவரத்து சிக்னல் செயல்படுகிறது. இதர பகுதிகளில் இருக்கும் போக்குவரத்து சிக்னல்கள் எதுவும் செயல்படுவது இல்லை. வாகனங்களின் அத்துமீறல்களை கட்டுப்படுத்தி போக்குவரத்தை சீரமைக்க வேண்டிய சிக்னல்கள், வெறும் காட்சி பொருளாகவே உள்ளன.
இதில் நாகல்நகர், பெரியார் சிலை, எம்.வி.எம். கல்லூரி ஆகிய இடங்களில் போக்குவரத்து போலீசார் நின்றாலும், போக்குவரத்தை முழுமையாக சீரமைக்க முடியவில்லை. இதனால் செயல்படாத சிக்னல்களால், முக்கிய சந்திப்புகளில் வாகனங்கள் போட்டிபோட்டு முந்தி செல்கின்றன.
தத்தளிக்கும் மக்கள்
ஒரே நேரத்தில் வாகனங்கள் முந்தி செல்ல முயற்சி செய்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் காலை நேரத்தில் வேலைக்கு செல்வோர், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், விவசாயிகள், கூலி தொழிலாளர்கள் என அனைத்து தரப்பினரும் நெரிசலில் சிக்கி தத்தளிக்கின்றனர்.
ஒருசில நேரங்களில் வாகன ஓட்டிகளுக்கு இடையே நடுரோட்டில் வாக்குவாதமும் ஏற்பட்டு விடுகிறது. அமைதியாக தொடங்கிய காலை பொழுது சிலருக்கு கலவரமாகி பதற்றத்தை கொடுக்கிறது. இந்த நிலை மாறுவதற்கு நகரில் முக்கிய சந்திப்புகளில் இருக்கும் போக்குவரத்து சிக்னல்களை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.