மதுரையில் கட்டுக்கடங்காமல் கூடிய கூட்டம்:'ஹேப்பி ஸ்டீரிட்' நிகழ்ச்சியில் நெரிசல்; பெண்கள் மயங்கி விழுந்ததால் பரபரப்பு- பாதியில் நிறுத்தப்பட்டது


மதுரையில் நடந்த ‘ஹேப்பி ஸ்டீரிட்’ நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல் ஏற்பட்டதால், அந்த நிகழ்ச்சி பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

மதுரை


மதுரையில் நடந்த 'ஹேப்பி ஸ்டீரிட்' நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல் ஏற்பட்டதால், அந்த நிகழ்ச்சி பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

'ஹேப்பி ஸ்டீரிட்' நிகழ்ச்சி

மதுரை அண்ணாநகர் பகுதியில் மாநகராட்சி சார்பில் 'ஹேப்பி ஸ்டீரிட்' விடுமுறை கொண்டாட்ட நிகழ்ச்சி நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனைதொடர்ந்து நேற்று காலை அந்த பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டனர். குறிப்பாக, அண்ணாநகர் பகுதியில் இருந்து மேலமடை சந்திப்பு வரை உள்ள சாலை முழுவதும் இளம்பெண்கள், சிறுவர்-சிறுமிகள், வாலிபர்கள் என ஏராளமானவர்கள் திரண்டிருந்தனர். இந்த நிகழ்ச்சியை, அமைச்சர்கள் மூர்த்தி, பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். நடிகர் சூரி, கலெக்டர் சங்கீதா, மேயர் இந்திராணி, கமிஷனர் பிரவீன்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சி தொடங்கிய நேரத்தில் இருந்தே, ஆட்டம்-கொண்டாட்டம் என உற்சாகமாக நடந்தது. வேடிக்கை, விளையாட்டுகளாலும் களை கட்டியது. பலர் உற்சாக கூச்சல் எழுப்பினர்.

கூட்ட நெரிசல்

இதற்கிடையே, கூட்டத்தினர் திடீரென மேடையை நோக்கி முன்னேற முயன்றனர். இதனால், கூட்டநெரிசல் ஏற்பட்டது.

பலர் நெரிசலில் சிக்கியும், அங்குள்ள தடுப்புகளில் சிக்கியும், சில பெண்கள் மயங்கி விழுந்தும் காயம் அடைந்தனர். அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு முதல் உதவி அளித்தனர். போலீசார் கூட்டத்தை ஒழுங்குபடுத்த முயற்சி எடுத்தனர். செருப்புகளும் பறந்து வந்து விழுந்தன.இந்த சம்பவங்களால் பரபரப்பு ஏற்பட்டதால், நிகழ்ச்சி பாதியிலேயே நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதில் கலந்து கொண்டவர்கள் கூறுகையில், சந்தோஷமாக இருக்கும் என நினைத்துதான் வந்தோம். ஆனால், வந்த அனைவருக்கும் ஏமாற்றம்தான். சென்னை போன்ற இடங்களில் சிறப்பாக ஒருங்கிணைத்து நல்ல முறையில் நிகழ்ச்சியை நடத்தினார்கள். ஆனால், மதுரையில் சரியான திட்டமிடல் இல்லாத காரணத்தால் குளறுபடி ஏற்பட்டு பாதியில் நிறுத்தப்பட்டு உள்ளது. போதிய போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடவில்லை. இவ்வளவு கூட்டம் வரும் என யாரும் எதிர்பார்க்கவும் இல்லை. வந்தவர்களில் பாதி பேர் திரும்பி சென்றுவிட்டனர். அடுத்தமுறை இதுபோன்ற நிகழ்ச்சியை திட்டமிட்டு நடத்தினால் சிறப்பாக இருக்கும் என்றனர்.

1 More update

Next Story