சுகாதாரமற்ற குடிநீர் வினியோகம்


சுகாதாரமற்ற குடிநீர் வினியோகம்
x

மணப்பாறை அருகே சுகாதாரமற்ற குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் மனு அளிக்கப்பட்டது.

திருச்சி

மணப்பாறை அருகே சுகாதாரமற்ற குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் மனு அளிக்கப்பட்டது.

மக்கள் குறைதீர் நாள் கூட்டம்

திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை பெற்றார். இதில் பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, பட்டா பெயர் மாறுதல், இலவச வீட்டுமனைப்பட்டா உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்கள் நீண்டவரிசையில் காத்திருந்து மனுக்களை அளித்தனர்.

மக்கள் தேசம் கட்சி மாவட்ட செயலாளர் முருகன் தலைமையில் நிர்வாகிகள் அளித்த மனுவில், மணப்பாறை கண்ணுடையான்பட்டிகிராமம் முத்துப்புடையான்பட்டி அம்பேத்கார்தெருவில் மக்களுக்கு குடிநீர் வசதி முறையாக செய்து தர வேண்டும். மாதத்துக்கு 3 முறை மட்டும் தான் காவிரி தண்ணீர் வருகிறது. மேலும் உப்புத்தண்ணீர்வரும் குழாயில் சுகாதாரமற்ற முறையில் தண்ணீர் வருவதால் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆகவே இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.

மாநகராட்சி

இதேபோல் திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. மேயர் அன்பழகன் தலைமை தாங்கினார். மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், துணைமேயர் திவ்யா, நகர பொறியாளர் சிவபாதம் மற்றும் மண்டல தலைவர்கள், உதவி ஆணையர்கள் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 580 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.

1 More update

Next Story