"இல்லாநிலை பட்ஜெட்.. கடைசி பட்ஜெட்..." - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை


இல்லாநிலை பட்ஜெட்.. கடைசி பட்ஜெட்...  - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை
x

கோப்புப்படம்

தினத்தந்தி 1 Feb 2024 7:18 PM IST (Updated: 1 Feb 2024 8:17 PM IST)
t-max-icont-min-icon

ஆட்சிக்காலம் முடியப் போகிறது என்ற அலட்சியம்தான் இடைக்கால பட்ஜெட்டில் தெரிவதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை,

எடை போட்டுப் பார்க்க ஏதுமில்லாத வெற்று அறிக்கையை மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், "இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்து பத்தாண்டு காலம் ஆட்சி செய்து, சொல்லிக்கொள்ள எந்தச் சாதனையும் செய்யாத பா.ஜனதா அரசு, ஆட்சிக்காலத்தையும் முடித்து விடைபெறும் நேரத்தில் இடைக்கால நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. எடை போட்டுப் பார்க்க ஏதுமில்லாத வெற்று அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளார் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்.

கடந்தகாலச் சாதனைகளையும் இந்த நிதிநிலை அறிக்கை சொல்லவில்லை; நிகழ்காலப் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதாகவும் இது அமையவில்லை; எதிர்காலப் பயன்களுக்கு உத்தரவாதம் தருவதாகவும் இல்லை! மொத்தத்தில், ஏதுமற்ற அறிக்கையை வாசித்தளித்திருக்கிறார் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன். ஆட்சிக்காலம் முடியப் போகிறது என்ற அலட்சியம்தான் இந்த அறிக்கையில் தெரிகிறது.

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால் பல்வேறு சலுகைகளைப் பொதுமக்கள் எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். பெட்ரோல், டீசல், சிலிண்டர் ஆகியவற்றின் விலைக்குறைப்பு இருக்கும் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால், பொதுமக்களுக்கு ஏமாற்றத்தையே பரிசளித்துள்ளது இந்த நிதிநிலை அறிக்கை.

வருமான வரி உச்சவரம்பில் மாற்றம் இருக்கும் என்று நடுத்தர மக்கள் எதிர்பார்த்தார்கள். அதனையும் வழங்கவில்லை; எந்தப் பொருளுக்கும் வரிக்குறைப்பு வழங்கப்படவில்லை. சலுகைகளும் ஏதுமில்லை; சாதாரண, சாமானிய, ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கான எந்த அறிவிப்பும் இல்லை! உழவர்களின் மிக முக்கியமான கோரிக்கையான குறைந்தபட்ச ஆதார விலை குறித்த அறிவிப்பு உண்டா..? அதுவும் இல்லை!

இப்படி 'இல்லை... இல்லை...' என்று சொல்வதற்காக எதற்கு நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும்...? நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளது 'இல்லா நிலை' பட்ஜெட்டாக மட்டுமே அமைந்துள்ளது.

இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சி காணவில்லை. பணவீக்கம் குறையவில்லை. வறுமை ஒழிக்கப்படவில்லை. வேலையில்லாத் திண்டாட்டம் ஒழியவில்லை. ஆனால் இதையெல்லாம் செய்து காட்டிவிட்டதாக பொய் அறிக்கையை தாக்கல் செய்துள்ளார் நிதி மந்திரி. மகளிருக்கு இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை. வழங்கிவிட்டதாகத் தங்களுக்கு தாங்களே தோளைத் தட்டிக் கொள்கிறார்கள்.

அனைத்துச் சமூக மக்களுக்குமான உரிமையைச் சரிசம விகிதத்தில் பறிப்பதுதான் பா.ஜனதா பயன்படுத்தும் சமூகநீதி. சமூகநீதி என்ற சொல்லைப் பயன்படுத்தும் மாற்றத்தை பா.ஜனதா அடைந்திருப்பதைப் பார்த்துச் சிரிப்பு வருகிறது.

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கான நிதியை வழங்காமல் தமிழ்நாட்டு மக்களுக்கு மிகப்பெரிய துரோகம் செய்துள்ளார்கள்" என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்." என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


Next Story