தலைமறைவானவரை கைது செய்யக்கோரி உறவினர்கள் மறியல்


தலைமறைவானவரை கைது செய்யக்கோரி உறவினர்கள் மறியல்
x

இடத்தகராறில் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவானவரை கைது செய்யக்கோரி உறவினர்கள் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

புதுக்கோட்டை

கொலை

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் சந்தைப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் கலிபுல்லா (வயது 54). திருமயம் அகில்கரை பகுதியை சேர்ந்தவர் ஜவுளிக்கடை உரிமையாளர் தனபால் (51). இவர்கள் இருவருக்கும் இடையே இடத்தகராறு இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் இவர்கள் இருவருக்கும் இடையே இடத்தகராறு சம்பந்தமாக பிரச்சினை ஏற்பட்டது.

இதில் தனபால் மற்றும் அவரது உறவினர்கள் ஆகியோர் சேர்ந்து கலிபுல்லாவை கட்டையால் தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த அவருக்கு திருமயம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் கொண்டு செல்லும் வழியிலேயே கலிபுல்லா பரிதாபமாக இறந்தார்.

3 பேர் கைது

இதுகுறித்து திருமயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, குற்றவாளிகளான தனபால் அவரது மனைவி முத்துமாரி மற்றும் கோவிந்தராஜ் ஆகியோரை கைது செய்தனர். மேலும் இதில் தொடர்புடைய பரளி கிராமத்தை சேர்ந்த பழக்கடை பாலசுப்பிரமணியன் என்பவரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி கலிபுல்லாவின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து போராட்டம் நடத்தியவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர்.

மறியல்

இந்நிலையில் நேற்று வரை பாலசுப்பிரமணியன் மட்டும் கைது செய்யப்படவில்லை. இதனை கண்டித்தும், பாலசுப்பிரமணியனை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கூறி கலிபுல்லாவின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் திருமயம் ஸ்டேட் வங்கி பகுதியில் புதுக்கோட்டை- மதுரை-காரைக்குடி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

மேலும் தலைமறைவாக உள்ள பாலசுப்பிரமணியனை போலீசார் கைது செய்யாத வரை புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள கலிபுல்லா உடலை வாங்கப் போவதில்லை என உறவினர்கள் கூறினர். இதற்கிடையே சம்பவ இடத்திற்கு வந்த கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கீதா, தாசில்தார் பிரவீனா மேரி, பொன்னமராவதி துணை போலீஸ் சூப்பிரண்டு அப்துல் ரகுமான் ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

போக்குவரத்து பாதிப்பு

அப்போது மறியலில் ஈடுபட்டவர்கள் பாலசுப்பிரமணியனை கைது செய்யாத வரை போராட்டம் நடத்துவோம் எனக் கூறினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து போலீசார் தலைமறைவாக உள்ள பாலசுப்பிரமணியனை விரைவில் கைது செய்வதாக உறுதி அளித்தனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் புதுக்கோட்டை- மதுரை-காரைக்குடி சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story