பயன்படுத்த முடியாத பயணிகள் நிழற்குடை
பொள்ளாச்சி அருகே பயன்படுத்த முடியாத நிலையில் பயணிகள் நிழற்குடை உள்ளது.
பொள்ளாச்சி
பொள்ளாச்சி அருகே பயன்படுத்த முடியாத நிலையில் பயணிகள் நிழற்குடை உள்ளது.
நிழற்குடை
பொள்ளாச்சி அருகே உள்ள ராமநாதபுரத்தில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இங்கிருந்து பள்ளி, கல்லூரிகளுக்கு மாணவ-மாணவிகள் சென்று வருகின்றனர். மேலும் பலரும் வேலைக்கு செல்கின்றனர். இந்த நிலையில் ராமநாதபுரத்தில் இருந்து பொள்ளாச்சி மற்றும் வெளியூருக்கு செல்வதற்கு பொதுமக்கள் பஸ்சில்தான் பெரும்பாலும் சென்று வருகின்றனர்.
இதற்கிடையில் பொதுமக்கள் பஸ்சிற்காக காத்திருக்க பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த பயணிகள் நிழற்குடை பொதுமக்களுக்கு மழை மற்றும் வெயில் காலங்களில் மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
மிகவும் சிரமம்
தற்போது பாலக்காடு ரோடு நான்கு வழிச்சாலையாக மாற்றப்படுவதால் பயணிகள் நிழற்குடை முன் மணல் குவித்து வைக்கப்பட்டு உள்ளது. மேலும் புதர் செடிகள் வளர்ந்து உள்ளதால் பயணிகள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் வெயில் மற்றும் மழைக்காலங்களில் மிகவும் சிரமப்படுகின்றனர். இதுகுறித்து பயணிகள் கூறியதாவது:-
ராமநாதபுரத்தில் உள்ள பயணிகள் நிழற்குடை மிகுந்த பயனுள்ளதாக இருந்தது. தற்போது நான்கு வழிச்சாலை பணிகள் தொடங்கியதும் அந்த நிழற்குடை முன் மணல் கொண்டு குவித்து வைத்து உள்ளனர். தற்போது பெய்த பருவமழையின் காரணமாக புதர் செடிகள் வளர்ந்து நிழற்குடை இருப்பதே தெரிவதில்லை. இதன் காரணமாக சமூக விரோதிகள் நிழற்குடையின் உள்ளே அமர்ந்து மது அருந்துகின்றனர்.
உறுதி தன்மை
இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே பயணிகள் நிழற்குடை முன் உள்ள மண், புதர்செடிகளை அகற்றி மீண்டும் பயன்படுத்த ஏற்பாடு செய்ய வேண்டும்.
இதற்கிடையில் பயணிகள் நிழற்குடை பழுதடைந்து உள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டும். நிழற்குடை உறுதி தன்மை மோசமாக இருந்தால், அதை இடித்து அகற்றி விட்டு புதிதாக கட்டி கொடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.