உபவடி நில நீர் பயனாளிகள் சங்க தேர்தல் அடுத்த மாதம் 8-ந் தேதி நடக்கிறது


உபவடி நில நீர் பயனாளிகள் சங்க தேர்தல் அடுத்த மாதம் 8-ந் தேதி நடக்கிறது
x

உபவடி நில நீர் பயனாளிகள் சங்க தேர்தல் அடுத்த மாதம் 8-ந் தேதி நடக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டத்தில் சின்னாறு உபவடி நிலம், சுவேதா நதி உபவடி நிலம், மேல் வெள்ளாறு உபவடி நிலம் மற்றும் கீழ் வெள்ளாறு உபவடி நிலம் ஆகிய பகுதிகளில் நீரினை பயன்படுத்துவோர் சங்கங்களின் தலைவர்கள் மற்றும் ஆட்சி மன்ற தொகுதி உறுப்பினர்கள் தேர்தல் அடுத்த மாதம் (அக்டோபர்) 8-ந்தேதி நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு படிவங்கள் பெரம்பலூர், வேப்பந்தட்டை மற்றும் குன்னம் ஆகிய வட்டாட்சியர் அலுவலகங்களில் வழங்கப்படும். பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் தேர்தல் நடத்தும் அலுவலராக செயல்படுவார். வேட்பு மனுக்கள் வரும் வருகிற 26-ந்தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பெறப்படும். தகுதியுள்ள வேட்பு மனுக்களின் பட்டியல் 30-ந்தேதி வெளியிடப்படும். அன்றைய தினம் வேட்பு மனுக்களை திரும்பப் பெற கடைசி நாள் ஆகும். மேலும் அன்றைய தினம் மாலை 4 மணிக்கு மேல் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை இறுதி செய்தல், தேர்தல் சின்னம் ஒதுக்கீடு பணி நடைபெறும். தேர்தலுக்கான வாக்குப்பதிவு அடுத்த மாதம் 8-ந்தேதி காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை ஒப்புதல் செய்யப்பட்டுள்ள வாக்குசாவடி மையங்களில் நடைபெறும். அன்றைய தினம் மாலை 4 மணிக்கு வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். தேர்தலில் போட்டியிட விரும்பும் நில உரிமைதாரர்கள் தலைவர் பதவிக்கு ரூ.300, ஆட்சி மண்டல தொகுதி உறுப்பினர் பதவிக்கு ரூ.200 செலுத்தி விண்ணப்பிக்கலாம்.இந்த தகவலை பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.


Next Story