ரூ.27.28 கோடியில் மின்மாற்றிகளின் தரம் உயர்வு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 5 துணை மின்நிலையங்களில் ரூ.27 கோடியே 28 லட்சத்து 6 ஆயிரம் மதிப்பில் திறன் மின்மாற்றிகளின் தரம் உயர்த்தப்பட்டுள்ளதை காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
காவேரிப்பட்டணம்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 5 துணை மின்நிலையங்களில் ரூ.27 கோடியே 28 லட்சத்து 6 ஆயிரம் மதிப்பில் திறன் மின்மாற்றிகளின் தரம் உயர்த்தப்பட்டுள்ளதை காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
மின்மாற்றிகள் தரம் உயர்வு
கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி, காமன்தொட்டி, பெண்ணேஸ்வரமடம், பாகலூர் மற்றும் ஜூஜூவாடி ஆகிய 5 துணை மின் நிலையங்களில் ரூ.27 கோடியே 28 லட்சத்து 6 ஆயிரம் மதிப்பில் திறன் மின்மாற்றிகளின் தரம் உயர்த்தியும், கூடுதல் மின்மாற்றிகள் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கூடுதல் திறன் மின்மாற்றி செயல்பாட்டை சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலமாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இதனை தொடர்ந்து பெண்ணேஸ்வரமடம் துணை மின் நிலையத்தில், திறன் மின் மாற்றியின் செயல்பாடுகளை மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்து, இனிப்பு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மின்சார வாரிய மேற்பார்வை பொறியாளர் ஏஞ்சலா சகாயமேரி, வேலூர் மண்டல தலைமை பொறியாளர் ஞான பெட்ஷீபா, செயற்பொறியாளர்கள் பழனி, பவுன்ராஜ், காவேரிப்பட்டணம் பேரூராட்சி தலைவர் அம்சவேணி செந்தில்குமார் மற்றும் மின்வாரிய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
தடையில்லா மின்சாரம்
தொடர்ந்து மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி கூறுகையில், முதல்-அமைச்சர் விவசாயிகள் பயன்பெறும் வகையில் மின்சாரத்துறையில் பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதன்படி, தற்போது குருபரப்பள்ளி, காமன்தொட்டி, பெண்ணேஸ்வரமடம், பாகலூர், ஜூஜூவாடி ஆகிய துணை மின் நிலையங்களில் தரம் உயர்த்தப்பட்டுள்ள திறன் மின்மாற்றிகளின் மூலம் குறைந்த, அதிக மின்அழுத்தம் நிவர்த்தி செய்யப்படும். இந்த 5 துணை மின் நிலையங்கள் மூலம் 46 ஆயிரம் பயனாளிகள், விவசாயிகள் உள்ளிட்டோருக்கு சீரான தடையில்லா மின்சாரம் வழங்கப்படும் என்று கூறினார்.