உப்புக்கோட்டை பகுதியில்கொத்தமல்லி தழை விலை அதிகரிப்பு
உப்புக்கோட்டை பகுதியில் கொத்தமல்லி தழை விலை அதிகரித்துள்ளது.
போடி தாலுகா உப்புக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் காய்கறிகள் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. கடந்த மாதம் உப்புக்கோட்டை, கூழையனூர், குச்சனூர், பாலார்பட்டி, குண்டல் நாயக்கன்பட்டி, கோட்டூர், சீலையம்பட்டி, உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் கொத்தமல்லி விதை நடவு செய்யப்பட்டது. ஒரு மாதமான நிலையில் கொத்தமல்லி தழை நன்கு விளைச்சல் அடைந்துள்ளது. அவற்றை விவசாயிகள் பறித்து தற்போது விற்பனைக்கு அனுப்பி வருகின்றனர். இங்கு விளையும் கொத்தமல்லி தழைகள் தேனி, தேவாரம், சின்னமனூர் ஆகிய மார்க்கெட்டுகளுக்கு கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
இதுகுறித்து கொத்தமல்லி தழை சாகுபடி செய்த விவசாயி கூறுகையில், நான் ஒரு ஏக்கரில் கொத்தமல்லி தழை சாகுபடி செய்துள்ளேன். ஒரு ஏக்கருக்கு 15 கிலோ விதை தேவைப்படுகிறது. ஒரு கிலோ விதை ரூ.250வீதம் 15 கிலோ வாங்கினேன். விதை, கூலியாட்கள், பூச்சி மருந்து தெளித்தல் உள்பட ரூ.12 ஆயிரம் வரை செலவானது. கொத்தமல்லி தழை தற்போது நன்கு விளைச்சல் அடைந்துள்ளது. அதேபோல் விலையும் அதிகரித்துள்ளது. கொத்தமல்லி கிலோ ரூ.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்றார்.