சாலை விரிவாக்கத்துக்கு குளக்கரையில் இருந்து வேருடன் பிடுங்கி மாற்று இடத்தில் மரங்களுக்கு மறுவாழ்வு


சாலை விரிவாக்கத்துக்கு குளக்கரையில் இருந்து வேருடன் பிடுங்கி  மாற்று இடத்தில் மரங்களுக்கு மறுவாழ்வு
x
தினத்தந்தி 19 Sept 2022 12:15 AM IST (Updated: 19 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

சாலை விரிவாக்கத்திற்காக கோவை குளக்கரையில் இருந்து மரங்களை வேருடன் பிடிங்கி மாற்று இடத்தில் நட்டு மறு வாழ்வு கொடுக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

கோயம்புத்தூர்

கோவை

சாலை விரிவாக்கத்திற்காக கோவை குளக்கரையில் இருந்து மரங்களை வேருடன் பிடிங்கி மாற்று இடத்தில் நட்டு மறு வாழ்வு கொடுக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

குளங்கள் புனரமைப்பு

கோவை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள உக்கடம் பெரியகுளம், வாலாங்குளம், குறிச்சி குளம், முத்தண்ணன் குளம், கிருஷ்ணாம்பதி குளம் உள்ளிட்ட குளங்கள் ரூ.900 கோடியில் மேம்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி குளக்கரைகள் பலப்படுத்தப்பட்டு அதில் நடைபாதை, பூங்கா, சிறுவர்கள் விளையாட்டு திடல் உள்ளிட்டவை அமைக்கப்படுகிறது. இதனால் குளக்கரைகளில் போடப்பட்டு உள்ள சாலைகளின் அகலம் குறைந்து வருகிறது.

குறிப்பாக முத்தண்ணன் குளக்கரை மற்றும் கிருஷ்ணாம்பதி குளக்கரை அகலம் வெகுவாக குறைந்து உள்ளது. இதனால் இந்த சாலையில் வாகனங்களை இயக்க வாகன ஓட்டிகள் அவதி அடைகின்றனர். மேலும் அகலம் குறைந்த சாலையில் வேகமாக செல்லும் வாகனங்களால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதையடுத்து கிருஷ்ணாம்பதி குளக்கரை சாலையை அகலப்படுத்த மாநில நெடுஞ்சாலை துறையினர் முடிவு செய்தனர்.

2 கி.மீ. சாலை அகலப்படுத்த முடிவு

இதுகுறித்து நெடுஞ்சாலை துறையினர் கூறியதாவது:-

பூசாரி பாளையத்தில் இருந்து வீரகேரளம் வழியாக தொண்டாமுத்தூர் செல்லும் சாலையில் கிருஷ்ணாம்பதி குளக்கரையில் போடப்பட்டு உள்ள சாலையை அகலப்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக சாலையின் ஒரு பகுதியில் தடுப்புசுவர் கட்டப்பட்டு 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு அகலப்படுத்தப்பட உள்ளது. இதையடுத்து சாலையோரம் உள்ள தேக்கு, வாகை, வேப்ப மரம் உள்பட 25-க்கும் மேற்பட்ட மரங்களை வேருடன் பிடுங்கி அதே பகுதியில் வேறு இடத்தில் நடவு செய்ய திட்டமிடப்பட்டது. இதற்காக அந்த மரத்தின் கிளைகள் வெட்டப்பட்டு உள்ளன.

தற்போது முதற்கட்டமாக 8 மரங்கள் வேருடன் பிடுங்கி வேறு இடத்தில் நடவு செய்யப்பட்டு உள்ளது. மீதம் உள்ள மரங்களும் விரைவில் வேறு இடத்தில் நடவு செய்யப்படும். இந்த பணிகள் நிறைவடைந்தால் இந்த சாலை 60 அடி அகலத்திற்கு விரிவுடையும். இதையடுத்து கிருஷ்ணாம்பதி குளத்திற்கு வரும் பொதுமக்கள் இந்த சாலையின் ஒருபகுதியில் வாகனங்களை நிறுத்தி கொள்ளலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

சமூக ஆர்வலர்கள் கூறும்போது, கோவை குளங்கள் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் குளங்களில் பூங்கா, விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. இதனால் விடுமுறை நாட்களில் இங்கு கூட்டம் அலை மோதுகிறது. ஆனால் அவ்வாறு வரும் பொதுமக்களின் வாகனங்களை நிறுத்த போதிய இடவசதி ஏற்படுத்தப்பட வில்லை. தற்போது மரங்களை அகற்றி சாலைகள் விரிவாக்கப்படுகிறது. மரங்களை அகற்றாமல் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றனர்.


Next Story