வட்டக்கானலில் வேரோடு சாய்ந்த மரம்
கொடைக்கானல் வட்டக்கானல் பகுதியில் பெய்த மழைக்கு மரம் ஒன்று வேரோடு சாய்ந்தது.
கொடைக்கானல் பகுதியில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இ்ந்நிலையில் நேற்றும் சாரல் மழை பெய்தது. இந்த தொடர் மழை காரணமாக நேற்று முன்தினம் இரவு வட்டக்கானல் பகுதியில் மிகப்பெரிய மரம் ஒன்று வேரோடு சாய்ந்து அருவியின் குறுக்கே விழுந்தது. இதனால் இந்த அருவியை அருகில் சென்று பார்க்க முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். இதையடுத்து மரத்தை அகற்றும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேபோல் வடமதுரை மற்றம் அதன் சுற்றுவட்டார பகுதியில் நேற்று முன்தினம் இரவு இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியதால் மோளப்பாடியூரில் இருந்து எட்டிக்குளத்துப்பட்டிக்கு செல்லும் மண் சாலை தண்ணீரில் அரித்து செல்லப்பட்டது. இதன்காரணமாக எட்டிக்குளத்துப்பட்டி, புதூர், கொசவபட்டி, நல்லமனார்கோட்டை, லக்கம்பட்டி, சுந்தராபுரி உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்லும் மக்கள் மிகவும் அவதி அடைந்துள்ளனர். வாகன ஓட்டிகள் 5 கிலோ மீட்டர் சுற்றி மாற்றுப்பாதையில் செல்லவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மண் அரிப்பு ஏற்பட்டுள்ள அந்த சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.