யு.பி.எஸ்.சி. தேர்வை 2,884 பேர் எழுதினர்
கோவையில் 8 மையங்களில் நடந்த யு.பி.எஸ்.சி. தேர்வை 2,884 பேர் எழுதினர். 4,932 பேர் தேர்வை எழுதவில்லை.
கோவை
கோவையில் 8 மையங்களில் நடந்த யு.பி.எஸ்.சி. தேர்வை 2,884 பேர் எழுதினர். 4,932 பேர் தேர்வை எழுதவில்லை.
யு.பி.எஸ்.சி. தேர்வு
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற சிவில் சர்வீசஸ் பணிகளுக்கான தேர்வுகள் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நாடு முழுவதும் நேற்று யு.பி.எஸ்.சி. தேர்வு நடைபெற்றது. அதில் கோவை மாவட்டத்தில் 8 மையங்களில் தேர்வு நடந்தது.
இதையொட்டி காலையிலேயே தேர்வர்கள் தேர்வு மையங்களுக்கு வந்து இருந்தனர். தேர்வு மையத்திற்கு வந்ததும், அவர்களின் ஹால் டிக்கெட் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் சரி பார்த்து விட்டு தேர்வு அறைக்கு அனுப்பி வைத்தனர். காலை மற்றும் மதியம் என்று 2 பிரிவாக தேர்வு நடைபெற்றது.
2,884 பேர் தேர்வு எழுதினர்
இந்த தேர்வையொட்டி மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணைய மாவட்ட ஒருங்கிணைப்பு மேற்பார்வையாளர், மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் தலைமையில் துணை கலெக்டர் நிலையில் 2 உதவி ஒருங்கிணைப்பு மேற்பார்வையாளர்கள், வட்டாட்சியர் நிலையில் 8 தேர்வு மையங்களுக்கும் தலா ஒரு தேர்வு மைய உதவி கண்காணிப்பாளர்கள், 171 அறை கண்காணிப்பாளர்கள் மாவட்ட நிர்வாகத்தின் மூலமும், 163 அறைக் கண்காணிப்பாளர்கள் தேர்வு மைய கண்காணிப்பாளர்கள் மூலமும் என மொத்தம் 334 அறை கண்காணிப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டு இருந்தனர். தேர்வின் செயல்பாடுகளை ஆய்வு செய்ய மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் துணை செயலர் நிலையில் அலுவலர் ஒருவர் நியமனம் செய்யப்பட்டு இருந்தார். இவர்கள் தேர்வு மையங்களில் ஆய்வு மேற்கொண்டனர். அனைத்து தேர்வு மையங்களிலும் துப்பாக்கி ஏந்திய பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.
காலையில் நடந்த தேர்வை 3,903 பேர் எழுத இருந்தனர். அவர்களில் 1,470 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். 2,433 பேர் தேர்வு எழுத வரவில்லை. இதுபோன்று மதியத்துக்கு பிறகு நடந்த தேர்வை 3,913 பேர் எழுத இருந்தனர். அதில் 1,414 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். 2,499 பேர் தேர்வு எழுதவில்லை. இதன்மூலம் இந்த தேர்வை 7,816 பேர் எழுத இருந்தநிலையில் 2,884 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். 4,932 பேர் தேர்வு எழுத வரவில்லை.