தொழிலாளர் விரோத சட்ட திருத்த மசோதாவை தமிழக அரசு திரும்ப பெற வலியுறுத்தல்


தொழிலாளர் விரோத சட்ட திருத்த மசோதாவை தமிழக அரசு திரும்ப பெற வலியுறுத்தல்
x

தொழிலாளர் விரோத சட்ட திருத்த மசோதாவை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும் என அகில இந்திய தொடக்கப்பள்ளி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் வலியுறுத்தினார்.

அரியலூர்

தமிழக ஆசிரியர் கூட்டணி சார்பில் முப்பெரும் விழா அரியலூரில் நடைபெற்றது. இதில் அகில இந்திய தொடக்கப்பள்ளி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்கள், பணி நிறைவு பெற்ற ஆசிரியர்களுக்கு பொன்னாடை போர்த்தி பாராட்டினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

150 ஆண்டு காலமாக போராடி தொழிலாளர்கள் பெற்ற உரிமைகளை பறிக்கும் வகையில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஓசைப்படாமல் தீர்மானம் நிறைவேற்றி உள்ளார்கள். 8 மணி நேரம் வேலை என்பதை 12 மணி நேரம் என சட்ட மசோதா தாக்கல் செய்துள்ளார்கள். சட்ட திருத்தத்தின் மூலமாக பணி நியமனம் செய்யப்படுபவர்களுக்கு குறைந்த சம்பளமே வழங்கப்படும். மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்த சட்டத்தை மற்ற மாநிலங்கள் எதிர்க்கிறபோது திராவிட மாடல் அரசு என சொல்லும் தி.மு.க. அரசு மத்திய அரசின் கொள்கைக்கு ஒத்து போகிற அரசாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. தொழிலாளர் விரோத சட்ட திருத்த மசோதாவை தமிழக அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவோம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் மாநில தலைவர் நம்பிராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story