அரசு சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தல்
அரசு சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது.
விருதுநகரில் கடந்த 3 தினங்களில் 2 அரசு போக்குவரத்து கழக பஸ்கள் 2 வாகன விபத்து வழக்குகளில் ரூ.42 லட்சம் இழப்பீட்டுத் தொகை வழங்கப்படாததால் ஜப்தி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு பஸ்கள் ஜப்தி செய்யப்படுவதால் பொதுமக்களுக்கான போக்குவரத்து வசதியில் பாதிப்பு ஏற்படுவதுடன் போக்குவரத்து கழகத்திற்கும் வருமான இழப்பு ஏற்படுகிறது. மேலும் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினரும் பாதிக்கும் நிலை ஏற்படுகிறது. கடந்த காலங்களில் தமிழக அரசு இவ்வாறு போக்குவரத்து கழகத்தால் விபத்து இழப்பீட்டுத் தொகை வழங்க இயலாத நிலையில் அதற்காக சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்து அதன் மூலம் இழப்பீட்டுத்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதேபோன்று தற்போதும் அரசு இதற்கான சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்து விபத்து இழப்பீட்டு தொகைகளை வழங்கி இவ்வாறு போக்குவரத்து கழக பஸ்கள் ஜப்தி செய்யும் நடவடிக்கையை தவிர்க்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.