ஓய்வூதியர்களுக்கு கட்டணமில்லா பயணத்தை அமல்படுத்த வலியுறுத்தல்
ஓய்வூதியர்களுக்கு கட்டணமில்லா பயணத்தை அமல்படுத்த வலியுறுத்தப்பட்டது.
பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு ஓய்வு பெற்ற அலுவலர் சங்க விழா வெங்கடேசபுரத்தில் நடந்தது. விழாவிற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் முத்துசாமி தலைமை தாங்கினார். தலைமை நிலைய செயலாளர் மணி வரவேற்றார். செயலாளர் மருதமுத்து சங்கத்தின் ஆண்டறிக்கையை வாசித்தார். இதில் சிறப்பு விருந்தினராக சங்கத்தின் மாநில செயலாளர் முத்துக்குமரவேலு கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். கூட்டத்தில் தமிழக முதல்-அமைச்சரின் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் மேன்மேலும் வளர சங்கத்தின் சார்பில் பாராட்டப்படுகிறது. தமிழ்நாடு அரசு 2017-ல் அறிவிக்கப்பட்ட ஊதியக்குழுவின் நிலுவை தொகையை அனுமதித்து வழங்க வேண்டும். 70 வயதான ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்களுக்கு 10 சதவீத கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். குடும்ப பாதுகாப்பு நிதி ரூ.3 லட்சமாகவும், மருத்துவப்படியை ரூ.ஆயிரமாகவும் உயர்த்தி வழங்க வேண்டும். அகவிலைப்படியை மத்திய அரசு வழங்கும் நாள் முதலே நிலுவையின்றி வழங்க வேண்டும். ஓய்வூதியர்கள் அனைவருக்கும் அரசு பஸ்களில் கட்டணமில்லா பயணத்தை அமல்படுத்த வேண்டும். பெரம்பலூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி அமைக்கும் திட்டத்தை தொடங்க வேண்டும். பொங்கல் பரிசு தொகையாக ஓய்வூதியர்களுக்கு ரூ.ஆயிரமாக வழங்க வேண்டும். புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் கண்புரை சிகிச்சைக்கு அரசாணைப்படி ரூ.30 ஆயிரம் மருத்துவமனைகளில் அனுமதித்து சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.