கனிமவள கொள்ளையை தடுக்க உடனடி நடவடிக்கை -அண்ணாமலை வலியுறுத்தல்


கனிமவள கொள்ளையை தடுக்க உடனடி நடவடிக்கை -அண்ணாமலை வலியுறுத்தல்
x

தமிழகத்தில் கனிமவள கொள்ளையை தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

சென்னை,

தமிழகத்தில் ஆற்று மணல், கடல் மணல், மலைகள், பாறைகள் என்று கனிமவளம் பல்லாயிரக்கணக்கான லாரிகளில் களவு போகிறது. அண்டை மாநிலங்களுக்கு மிக அதிக அளவில் கனிமவளம் கடத்தப்படுகிறது. கனிமவள கொள்ளை எல்லை மீறி போய்க் கொண்டிருக்கிறது.

இதற்கு சாட்சியாக கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வட்டம் கொரட்டகிரியைச் சேர்ந்த மக்கள் தங்கள் கிராமத்தை விட்டே வெளியேறி, கனிமவள கொள்ளை லாரிகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். லாரிகளை மீட்கும் பணியில் ஈடுபட்ட போலீசார், பொதுமக்களை தாக்கியுள்ளனர்.

வௌியேறிய கிராம மக்கள்

அனுமதி பெறாமல் தனியார் சிலர் கொரட்டகிரி கிராமத்துக்கு அருகிலுள்ள மலையை உடைத்து அந்த குவாரியிலிருந்து ஜல்லி, எம்-சாண்ட் போன்றவற்றை கனரக லாரிகள் மூலம் கொண்டு செல்வதால் சாலைகள் முற்றிலுமாக சேதம் அடைந்துவிட்டது, விவசாயம் செய்ய முடியவில்லை என்று கூறி அந்த கிராம மக்கள் போராட்டம் நடத்த நெடுஞ்சாலைக்கு வந்துள்ளனர். போலீசார் சமாதானப்படுத்தியதில் மக்கள் திரும்பச் சென்றுள்ளனர்.

ஆனாலும் ஜல்லி, எம் சாண்ட் உள்ளிட்ட கனிமவள கொள்ளை நிற்கவில்லை. இரவும் பகலும் பலமான வெடிச் சத்தங்கள் கேட்டுக் கொண்டிருக்கின்றன. இதனால் வீடுகள் சேதம் அடைந்திருக்கின்றன. இந்த சூழலில் கிராம மக்கள் மீண்டும் தங்கள் வீடுகளை காலி செய்து வெளியேறி, அருகேயுள்ள வனப்பகுதியில் கூடாரம் அமைத்து தங்கி உள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உணவு, உதவிகளை பா.ஜ.க.வினர் செய்துவருகிறார்கள்.

நடவடிக்கை எடுக்க வேண்டும்

அண்டை மாநிலங்கள் எல்லாம் தங்கள் ஆறுகளையும், மலைகளையும், கனிமவளத்தையும் கண்ணும் கருத்துமாக காப்பாற்றிக் கொண்டிருக்கும்போது சுற்றுச்சூழல் பற்றிய சிந்தனை இல்லாமல் தமிழகத்தில் கனிமவள கொள்ளை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதை பா.ஜ.க. வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது. எனவே தமிழக அரசு கனிம வளக்கொள்ளையை தடுத்து நிறுத்திடவும், கொரட்டகிரி மக்கள் தங்கள் வாழ்விடங்களுக்கு மீண்டும் திரும்பும்வண்ணமும் உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். ஓரிரு நாட்களில் நல்ல முடிவு எட்டப்படாவிட்டால் பா.ஜ.க.வின் சார்பில் மிகப்பெரிய போராட்டம் முன்னெடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story