பெருமாள் கோவிலில் உறியடி உற்சவம்
பெருமாள் கோவிலில் உறியடி உற்சவம் நடந்தது.
தா.பழூர்:
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள தாதம்பேட்டையில் பெருந்தேவி தாயார் சமேத வரதராஜ பெருமாள் கோவிலில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பாஞ்சராத்திர ஆகம விதிப்படி கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் உறியடி உற்வம் நடைபெற்றது. இதை முன்னிட்டு வரதராஜ பெருமாள், பெருந்தேவி தாயார், ஆண்டாள், குழந்தை கிருஷ்ணர் ஆகிய தெய்வங்களுக்கு பல்வேறு வாசனாதி திரவியங்களால் சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. பின்னர் வரதராஜ பெருமாள், பாலகிருஷ்ணர் அலங்காரத்தில் எழுந்தருளி சேவை சாதித்தார்.
வேத மந்திரங்கள் முழங்க ஆகம விதிப்படி சகல உபசாரங்களும் செய்யப்பட்டன. மங்கள ஆரத்தி நடைபெற்று, பின்னர் மகா தீபாராதனை செய்யப்பட்டது. பாலகிருஷ்ணர் கோகுலத்தில் உறியில் கட்டி வைக்கப்பட்ட வெண்ணெய் பானையை உடைத்து வெண்ணெய் உண்ட நிகழ்வை நினைவூட்டும் வகையில் உறியடி உற்சவம் நடைபெற்றது. பக்தர்களுக்கு பிரசாதமாக வெண்ணெய் வழங்கப்பட்டது.