பிளாஸ்டிக் பூக்களை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்


பிளாஸ்டிக் பூக்களை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்
x
தினத்தந்தி 1 Aug 2023 2:30 AM IST (Updated: 1 Aug 2023 2:30 AM IST)
t-max-icont-min-icon

திருமண நிகழ்ச்சிகளில் பிளாஸ்டிக் பூக்களை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று ஊட்டி நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.

நீலகிரி

ஊட்டி

திருமண நிகழ்ச்சிகளில் பிளாஸ்டிக் பூக்களை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று ஊட்டி நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.

நகராட்சி கூட்டம்

ஊட்டி நகராட்சி மாதாந்திர கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு நகராட்சி தலைவர் வாணீஸ்வரி தலைமை தாங்கினார். ஆணையாளர் ஏகராஜ், பொறியாளர் சேர்மகனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு மதிப்பூதியம் வழங்கியதற்காக முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதைத்தொடர்ந்து கவுன்சிலர் கீதா, தனது வார்டில் அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படவில்லை என கூறி தலைவரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அவரை அதிகாரிகள் சமாதானப்படுத்தினர். தொடர்ந்து விவாதம் நடந்தது.

ஜார்ஜ்:- நகராட்சியில் அரசு வழங்கிய இலவச பட்டா மூலம் வீடு கட்டியவர்களுக்கு இதுவரை வரி விதிக்கவில்லை. இந்த வீடுகளுக்கு வரி விதித்தால் நகராட்சிக்கு பல கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும். மார்லிமந்து அணை தண்ணீரை சுத்திகரித்து வினியோகிக்க வேண்டும்.

ஆணையாளர் ஏகராஜ்:- நகராட்சியில் உள்ள 36 வார்டுகளிலும் இத்தகைய வீடுகளை கணக்கெடுத்து, வரி விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதுகுறித்து மன்றத்தில் தீர்மானம் கொண்டு வரலாம்.

மேம்பாட்டு நிதி

முஸ்தபா:- எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு தொகுதி மேம்பாட்டு நிதி ஒதுக்குவது போல, நகராட்சி கவுன்சிலர்களுக்கு வார்டு மேம்பாட்டு நிதி ஒதுக்க அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும். குன்னூர் நகர மன்றத்தில் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு பிளாஸ்டிக் பூக்களை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதேபோல் ஊட்டியிலும் தடை விதித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். கொரோனா காலத்தில் உள்ளாட்சி கடைகளுக்கான வாடகையை ரத்து செய்து அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. இதை நடைமுறைப்படுத்த வேண்டும்.

ஆணையாளர்:- நகர மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும். வாடகை ரத்து நடைமுறை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

தூர்வார வேண்டும்

அபுதாகீர்:- நகராட்சி குடியிருப்புகளுக்கு வாடகை நிர்ணயம் செய்ய வேண்டும். காந்தல் ஸ்லேட்டர் ஹவுஸ் பகுதியில் பாதாள சாக்கடை பிரச்சினையை தீர்க்க வேண்டும்.

குமார்:- பாரதியார் நகரில் தண்ணீர் பிரச்சினையை தீர்க்க வேண்டும். பிங்கர்போஸ்ட் முதல் தோப்புலைன் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை சீரமைக்க வேண்டும்.

துணை தலைவர் ரவிகுமார்:- நகரின் மையப்பகுதியில் உள்ள கோடப்பமந்து கால்வாயில் வெள்ளப்பெருக்கு பிரச்சினைக்கு தீர்வு காண ஏரியை தூர்வார வேண்டும். இதுகுறித்து நீர்வளத்துறை அமைச்சருக்கு கோரிக்கை விடப்பட்டு உள்ளது. ஊட்டி சுற்றுலா நகரம் என்பதால், நகரின் முக்கிய சாலைகளில் ஏற்படும் பிரச்சினைகளை உடனுக்குடன் சரிசெய்ய வேண்டும். இதற்கு தேவையான உபகரணங்களை வாங்கி இருப்பில் வைத்துக்கொள்ள வேண்டும்.

கூட்டத்தில் விவாதத்திற்கு கொண்டு வரப்பட்ட 31 தீர்மானங்களில், 30 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Next Story