அவசரகால மீட்புக்கான 'வீரா' வாகனத்தின் பயன்பாடு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்


அவசரகால மீட்புக்கான வீரா வாகனத்தின் பயன்பாடு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்
x

விபத்தில் சிக்கியவர்களை வாகனங்களில் இருந்து மீட்டெடுப்பதற்காக சென்னை போக்குவரத்து காவல்துறையில் அவசரகால மீட்புக்கான ‘வீரா' வாகனத்தின் பயன்பாட்டை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

சென்னை,

சாலைகளில் பாதுகாப்பை உறுதிசெய்ய மேற்கொள்ளப்படும் திட்டத்தின் ஒரு அங்கமாக, சாலை விபத்துகளில் சேதமடைந்த வாகனங்களில் சிக்கிக்கொள்பவர்களின் உயிரை காப்பதற்கு, ஒரு தனித்துவமான மற்றும் முன்னோடியான முயற்சியாக மீட்பு வாகனம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சி, இந்தியாவிலேயே முதல்முறையாக திட்டமிடப்பட்டதாகும்.

இது, சாலை விபத்தில் சிக்கி சேதமடைந்த வாகனங்களில் சிக்கிக்கொள்பவர்களை, தேவையான அனைத்து உபகரணங்கள் மற்றும் நன்றாக பயிற்சி பெற்ற காவல் குழுவினர் உதவியுடன் மீட்பதற்கான ஒரு முன்னோடி திட்டமாகும். இதற்காக பயன்படும் வாகனத்திற்கு வீரா (அவசரகால மீட்பு மற்றும் விபத்துக்களிலிருந்து மீட்கும் வாகனம்) என்று பெயரிடப்பட்டுள்ளது.

தொடங்கி வைத்தார்

இந்த முயற்சி, ஹூண்டாய் குளோவிஸ் மற்றும் இசுசூ மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து மேற்கொள்ளப்படும் கார்பரேட் சமூக பொறுப்பு திட்டமாகும். தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை மற்றும் மெட்ராஸ் இந்திய தொழில்நுட்பக் கழகம் ஆகியவை இந்தத் திட்டத்திற்கு தங்களது நிபுணத்துவம் மற்றும் பங்களிப்பை அளித்துள்ளன.

அந்தவகையில், சென்னை போக்குவரத்து காவல்துறை சார்பில், சாலை விபத்தில் சிக்கியவர்களை விபத்துக்குள்ளான வாகனங்களில் இருந்து மீட்டெடுக்கும் பணிக்காக, வீரா வாகனத்தின் பயன்பாட்டை சென்னை தலைமைச்செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்து, அதுபற்றிய காவல்துறையினரின் செயல்முறை விளக்கத்தை பார்வையிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் தலைமைச்செயலாளர் சிவ்தாஸ் மீனா, உள்துறை முதன்மைச் செயலாளர் அமுதா, போலீஸ் டி.ஜி.பி. சங்கர் ஜிவால், சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story