ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும் உத்தால பூக்கள்
குத்தாலம் உக்தவேதீஸ்வரர் கோவிலில் ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் பூக்கும் உத்தால பூக்கள் பூத்து குலுங்கியது. இதனை எராளமானோர் வியப்புடன் பார்த்து செல்கின்றனர்.
குத்தாலம்:
குத்தாலம் உக்தவேதீஸ்வரர் கோவிலில் ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் பூக்கும் உத்தால பூக்கள் பூத்து குலுங்கியது. இதனை எராளமானோர் வியப்புடன் பார்த்து செல்கின்றனர்.
உத்தால மரம்
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் திருக்கயிலாய பரம்பரை தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான உக்தவேதீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. தேவார பாடல் பெற்ற இத்தலத்தில் சிவபெருமான் பார்வதி தேவியை திருமணம் செய்து கொண்டதாக ஐதீகம். இத்தலத்தில் சுவாமி அம்பாளை வழிபட்டால் தடைகள் யாவும் நீங்கி திருமணம் கைகூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
சிவபெருமான் பார்வதி தேவியை திருமணம் செய்து கொள்வதற்காக கைலாயத்திலிருந்து வந்தபோது அவருக்கு நிழலாக உத்தால மரம் வந்ததாகவும் திருக்கல்யாணம் முடிந்து சுவாமி,அம்பாள் கைலாயம் செல்லும்போது இத்தலத்தில் உத்தால மரத்தையும், தனது பாதரச்சையையும் சுவாமி விட்டுசென்றதாக கோவில் தல வரலாறு கூறுகிறது.சுமார் 1500 ஆண்டுகள் பழமையான இக்கோவிலில் இன்றளவும் இந்த மரம் பசுமையுடன் காணப்படுகிறது.
ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும்
இந்த மரத்தில் ஆண்டுக்கு ஒரு முறை பங்குனி மாத கடைசியிலும் சித்திரை மாத துவக்கத்திலும் பூக்கள் பூப்பது வழக்கம்.அதே போல இத்தலத்தில் உள்ள உத்தால மரத்தில் தற்பொழுது பூக்கள் பூத்துக் குலுங்கியது. இதனை ஏராளமானோர் ஆர்வத்துடன் வந்து பார்த்து செல்கின்றனர். மருத்துவ குணம் உள்ளதாக கூறப்படும் இந்த பூ உதிர்வதை பக்தர்கள் அதிக அளவில் எடுத்தும் செல்கின்றனர்.
இந்த உத்தால பூ 5 விதமான இதழ்களையும்,5 வகையான சுவையையும் உடையது.மருத்துவ குணம் வாய்ந்த இந்த மலர் சகல நோய் நிவாரணியாகவும் விளங்குவதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர். ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் இந்த பூ அப்படியே உதிர்ந்து விடும்.காய் இல்லாததால் விதை கிடையாது.இந்த மரம் உலகில் வேறு எங்கும் கிடையாது என்று சொல்லப்படுகிறது.