உத்தமபாளையம் பகுதியில்2-ம் போக நெல் அறுவடை பணி தீவிரம்
உத்தமபாளையம் பகுதியில் 2-ம் போக நெல் அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கூடலூர் அருகே லோயர்கேம்பில் தொடங்கி பழனிசெட்டிப்பட்டி வரை உள்ள இடங்கள் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியாகும். இங்கு முல்லைப்பெரியாற்று பாசனம் மூலம் சுமார் 14 ஆயிரத்து 707 ஏக்கர் பரப்பளவில் இருபோக நெல் சாகுபடி செய்யப்படுகிறது. இந்த பகுதியில் தற்போது 2-ம் போக நெல் அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக கம்பம் கூடலூர், சுருளிப்பட்டி, காமயகவுண்டன்பட்டி, குச்சனூர், சின்னமனூர், உத்தமபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நெல் அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதனால் வியாபாரிகள் வயல்களுக்கே நேரடியாக வந்து நெல்லை விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்கின்றனர். 62 கிலோ எடை கொண்ட நெல் மூட்டை ரூ.1,200-க்கு கொள்முதல் செய்யப்பட்டது. தற்போது வெளி மாவட்ட வியாபாரிகள் அதிக அளவில் வருவதால் நெல் மூட்டை ஒன்றுக்கு 100 ரூபாய் உயர்ந்து ரூ.1,300-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதுகுறித்து விவசாயி சேது ராமச்சந்திரன் கூறுகையில், 2-ம் போக நெல் சாகுபடிக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை ஏற்படும் என்பதால் குறுகிய கால நெல் விதைகளை சாகுபடி செய்ய ஏற்கனவே அதிகாரிகள் வலியுறுத்தி இருந்தனர். அதன்படி 115 நாள் ஆன குறுகிய கால நெல் பயிர்களை சாகுபடி செய்தோம். அவை நன்கு விளைச்சல் அடைந்து தற்போது அறுவடை பணி நடந்து வருகிறது. நெல் மூட்டை ரூ.1,300-க்கு விற்பனை செய்தாலும் விவசாயிகளால் செலவு செய்த பணத்தை கூட எடுக்க முடியவில்லை என்றார்.