மயிலாடுதுறை
திருவெண்காடு
திருவெண்காடு அருகே சித்தன் காத்திருப்பு கிராமத்தில் உத்தராபதீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலின் குடமுழுக்கு நேற்று முன்தினம் நடந்தது. முன்னதாக கடந்த 7-ந் தேதி விநாயகர் பூஜையுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கின. தொடர்ந்து 3 கால யாக பூஜைகள் நடந்தன. பின்னர் 4-ம் கால யாகசாலை பூஜையும், கோ பூஜை, சுமங்கலி பூஜை உள்ளிட்டவை நடத்தப்பட்டு பூர்ணாஹூதி நடந்தது. இதனையடுத்து சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனிதநீர் கோபுர கலசங்களில் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடந்தது. இதனையடுத்து மூலவர் உத்தராபதீஸ்வரர் சாமிக்கு அபிஷேகம் நடந்தது. இதில் மாவட்ட கவுன்சிலர் ஆனந்தன், ஊராட்சி மன்ற தலைவர் துரைராஜன் மற்றும் முக்கிய பிரமுகர்கள், பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.