உய்யகொண்டான் வாய்க்காலில் நடை மேம்பாலம்-அமைச்சர் கே.என்.நேரு பேட்டி


உய்யகொண்டான் வாய்க்காலில் நடை மேம்பாலம்-அமைச்சர் கே.என்.நேரு பேட்டி
x

திருச்சியில் உய்யகொண்டான் வாய்க்காலில் நடை மேம்பாலம் அமைக்கப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்

திருச்சி

திருச்சியில் உய்யகொண்டான் வாய்க்காலில் நடை மேம்பாலம் அமைக்கப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்

உயர்மட்ட பாலம்

திருச்சி உறையூர் லிங்கம் நகர் பகுதியில் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க கட்டுப்பாட்டில் ரேஷன் கடை அமைக்கப்பட்டுள்ளது. இதனை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்து பொதுமக்களுக்கு அத்தியாவசிய உணவு பொருட்களை வழங்கினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பிறகு திருச்சியில் எண்ணற்ற பல திட்டங்களை செயல்படுத்தி உள்ளது. திருச்சி பஞ்சப்பூர் புதிய பஸ் நிலைய கட்டுமானத்துக்கு ரூ.380 கோடி, புதிய சந்தை அமைக்க ரூ.100 கோடி, தொழில் பூங்கா அமைக்க ரூ.600 கோடி ஒதுக்கப்பட்டு அதற்கான பணிகள் நடந்து வருகிறது. திருச்சி கோர்ட்டு அருகே உள்ள உய்யகொண்டான் வாய்க்காலில் நடை மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது.

அந்த இடத்தில் ரவுண்டானாவை சுருக்கினால் மேலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். அங்கிருந்து அல்லித்துறை வரை புதிய சாலை அமைக்க உள்ளோம். திருச்சி சிந்தாமணி முதல் குடமுருட்டி வரை உயர்மட்ட பாலம் அமைக்கப்பட உள்ளது. பெரும்பாலான திட்டங்கள் கலைஞர் ஆட்சிக் காலத்திலும், தற்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியிலும் திருச்சிக்கு வந்திருக்கிறது

பாதாள சாக்கடை

திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இனிகோ. இருதயராஜ் தனது தொகுதியில் சரியாக குடிநீர் வரவில்லை. அப்படி வந்தாலும் கலங்கலாக வருகிறது என தெரிவித்துள்ளார். திருச்சியை பொறுத்தவரை மாநகராட்சியில் உள்ள 65 வார்டுகளுக்கும் குடிநீர், சாலை வசதி என அனைத்தும் முழுமையாக செய்து தரப்பட்டுள்ளது. குறைகள் ஏதாவது இருந்தால் நிச்சயம் அது சரி செய்யப்படும். திருச்சியை பொறுத்தவரை கிழக்கு தொகுதி, மேற்கு தொகுதி என்று பாகுபாடு கிடையாது. மக்கள் அனைவரும் ஒன்றுதான். அ.தி.மு.க. ஆட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகள், சாலை பணிகளை தொடங்கி விட்டு அதை முழுமையாக முடிக்காமல் விட்டு சென்றனர். தற்போது நிதி பற்றாக்குறையால் அந்த பணிகள் தாமதமாக நடைபெற்று வருகிறது. அ.தி.மு.க.வை பொறுத்தவரை எந்த ஒரு பணியையும் முழுமையாக செயல்படுத்த வில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

10 ஜோடிகளுக்கு திருமணம்

இதேபோல் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை சார்பில் 10 ஜோடிகளுக்கு நேற்று திருமணம் நடைபெற்றது. இதனை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இதையொட்டி சமயபுரம் கோவிலில் நடந்த நிகழ்ச்சிக்கு அமைச்சர் கே.என். நேரு தலைமை தாங்கினார்.

நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் காடுவெட்டி தியாகராஜன், கதிரவன், திருச்சி மேயர் அன்பழகன், சமயபுரம் மாரியம்மன் கோவில் இணை ஆணையர் கல்யாணி, துணை ஆணையர்கள் ஹரிஹரசுப்பிரமணியன், லட்சுமணன், கோவில் செயல் அலுவலர்கள் மனோகரன், ஜெய்கிஷன் மற்றும் அறநிலையத்துறை அலுவலர்கள், மணமக்களின் பெற்றோர், உறவினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும், திருமண ஜோடிகளுக்கு ரூ.ஒரு லட்சம் மதிப்புள்ள சீர்வரிசைகள் மற்றும் பலகார குடம் உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டன. மேலும், ஒவ்வொரு ஜோடிக்கும் ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்களும் வழங்கப்பட்டன.தொடர்ந்து மணமக்கள் மற்றும் அவரது உறவினர்களுக்கு விருந்து அளிக்கப்பட்டது.


Next Story