மின்சார வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்
குத்தகை முறையில் பணியாளர்களை நியமிப்பது, பணியிடங்களை ரத்து செய்வது ஆகிய திட்டங்களை மின்சார வாரியம் கைவிட வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
சென்னை,
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மின் வாரியத்தின் திட்டங்கள் குறித்து கருத்து கேட்டு 19 தொழிற்சங்கங்களுக்கு மின்சார வாரியத்தின் நிதித்துறை இயக்குனர் சுந்தரவதனம் எழுதியுள்ள கடிதத்தில், தமிழ்நாடு மின்சார வாரியத்தில் தேவையான இடங்களில், தனியார் மனிதவள நிறுவனங்களிடம் இருந்து குத்தகை முறையில் ஆட்களைப் பெற்று நியமிப்பது குறித்தும், நீண்டகாலமாக பயன்படுத்தப்படாமல் கிடக்கும் பணியிடங்களை அடையாளம் கண்டு அவற்றை ஒழித்தல் உள்பட 5 யோசனைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
மின்சார வாரியத்தின் திட்டத்தை பார்க்கும் போது, அதில் ஏராளமான உபரி பணியிடங்கள் இருப்பது போலவும், அந்த பணியிடங்கள் தேவையற்றவை போலவும், அவற்றைத் தான் அரசு ஒழிக்கப்போவதைப் போலவும் தோன்றும். உண்மையில் மின்வாரியத்தில் மொத்தமுள்ள 1.45 லட்சம் பணியிடங்களில் 56 ஆயிரம் பணியிடங்கள், அதாவது சுமார் 40 சதவீத பணிகள் காலியாக உள்ளன. இவை கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாத நிலவரம் ஆகும். இது தற்போது 60 ஆயிரத்தை தாண்டி இருக்கலாம்.
எனவே, குத்தகை முறையில் பணியாளர்களை நியமிப்பது, பணியிடங்களை ரத்து செய்வது ஆகிய திட்டங்களை மின்சார வாரியம் கைவிட வேண்டும். அதற்கு மாற்றாக, மின்சார வாரியத்தில் காலியாக உள்ள அனைத்து பணியிடங்களையும் நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.