அரசு பங்களாவை காலி செய்யாமல் அடம் பிடித்த சசிகலா புஷ்பா: பொருட்களை ரோட்டில் வைத்த அதிகாரிகள்...!


சசிகலா புஷ்பாவின் பதவிக்காலம் முடிந்து இரண்டு ஆண்டுகள் ஆகியும், அரசு சார்பில் ஒதுக்கப்பட்ட வீட்டை காலி செய்யாமல் இருந்து வந்துள்ளார்.

புதுடெல்லி,

சசிகலா புஷ்பா தூத்துக்குடி மாநகராட்சியில் அதிமுக சார்பில் மேயராக 2011ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை இருந்து வந்தார்.

இதனையடுத்து,மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டார். பின்னர், மாநிலங்களவையில் ஜெயலலிதா என்னை அடித்துவிட்டார் என்று சசிகலா புஷ்பா கூறிய சம்பவம் அப்போது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து, அவர் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து அவரது இரண்டாவது திருமணம் தொடர்பான விவகாரத்திலும் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தது.

இந்நிலையில் பாஜகவில் இணைந்த சசிகலா புஷ்பா அக்கட்சியின் மாநிலத்துணைத் தலைவர் பொறுப்பில் இருந்து வருகிறார். இந்நிலையில், மாநிலங்களவையில் எம்.பி.யாக இருந்தபோது டெல்லியில் மத்திய அரசு சார்பில் அவருக்கு அரசு பங்களா ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், சசிகலா புஷ்பாவின் பதவிக்காலம் முடிந்து இரண்டு ஆண்டுகள் ஆகியும், அரசு சார்பில் ஒதுக்கப்பட்ட வீட்டை காலி செய்யாமல் இருந்து வந்துள்ளார். இருப்பினும் வீட்டை காலி செய்யும்படி அரசு தரப்பிலிருந்து பலமுறை நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது. ஆனால், அதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் வீட்டை காலி செய்யாமல் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில் டெல்லி நார்த் அவென்யு பிளாக் பகுதியில் இருக்கும் சசிகலா புஷ்பா வீட்டிற்கு சென்ற மத்திய அரசு அதிகாரிகள் அவரது வீட்டில் உள்ள பொருட்களை வெளியே வைத்து விட்டு அந்த குடியிருப்பிற்கு சீல் வைத்துள்ளனர். இதில் பாஜ மூத்த தலைவராக இருக்கும் சுப்ரமணிய சுவாமியையும் மத்திய அரசு வழங்கிய குடியிருப்பை உடனடியாக காலி செய்ய வேண்டும் என டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.


Next Story