தடுப்பூசி போட்ட பச்சிளங்குழந்தை பரிதாப சாவு
திண்டுக்கல் அருகே, தடுப்பூசி போட்ட பச்சிளங்குழந்தை பரிதாபமாக இறந்தது.
பச்சிளம் ஆண் குழந்தை
திண்டுக்கல் அருகே உள்ள பிள்ளையார்நத்தத்தை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 33). ஆட்டோ டிரைவர். அவருடைய மனைவி சுகன்யா (31). இந்த தம்பதிக்கு பிரித்வ்வீர் (4) என்ற மகன் இருக்கிறான். 2-வதாக கர்ப்பம் தரித்த சுகன்யாவுக்கு, கடந்த 50 நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு குருபிரசாத் என்று பெயரிட்டு வளர்த்து வந்தனர்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் பிள்ளையார்நத்தம் அங்கன்வாடி மையத்தில் நடந்த மருத்துவ முகாமில் குழந்தைக்கு சுகன்யா தடுப்பூசி செலுத்தினார். குழந்தையின் 2 தொடைகளில் தலா ஒரு ஊசியும், வலது கையில் ஒரு ஊசியும் செலுத்தப்பட்டது.
அன்றைய தினம் மாலையில் குழந்தைக்கு காய்ச்சல் ஏற்பட்டது. தடுப்பூசி போட்டதால் காய்ச்சல் இருக்கலாம் என நினைத்து, ஆஸ்பத்திரியில் கொடுத்த மருந்துகளை சுகன்யா குழந்தைக்கு கொடுத்தார்.
பரிதாப சாவு
இதையடுத்து நேற்று காலை தனது குழந்தைக்கு சுகன்யா தாய்ப்பால் கொடுத்தார். பால் குடித்த சிறிது நேரத்தில் குழந்தை திடீரென மயங்கியது. இதனால் பதறி போன சுகன்யா மற்றும் விஜயகுமார், குழந்தையை தூக்கி கொண்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு வந்தனர்.
அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், குழந்தை குருபிரசாத் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனைக்கேட்ட பெற்றோர் கதறி அழுதனர். இதனையடுத்து மருத்துவமனையில் அவருடைய உறவினர்களும் குவிந்தனர்.
மறியலில் ஈடுபட முயற்சி
இதற்கிடையே தடுப்பூசி போட்ட பிறகுதான் தனது குழந்தைக்கு காய்ச்சல் உள்ளிட்ட உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்து விட்டதாக டாக்டர்களிடம் அவர்கள் வாக்குவாதம் செய்தனர்.
மேலும் அவர்கள் அங்கு மறியலில் ஈடுபடுவதற்கான முயற்சியில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் வடக்கு மற்றும் தாலுகா போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது குழந்தையின் பிரேத பரிசோதனை அறிக்கை அடிப்படையில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனையடுத்து அவர்கள் மறியலில் ஈடுபடும் முயற்சியை கைவிட்டனர்.
போலீசில் புகார்
இந்த சம்பவம் குறித்து குழந்தையின் தந்தை விஜயகுமார் திண்டுக்கல் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதில், தடுப்பூசி போட்ட பிறகு குழந்தைக்கு காய்ச்சல், மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததாகவும், இதுபற்றி விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாண்டி, சப்-இன்ஸ்பெக்டர் மலைச்சாமி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் குழந்தையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், குழந்தையின் பிரேத பரிசோதனை அறிக்கையில் தடுப்பூசி செலுத்தியதில் எந்தவித பாதிப்பும் இல்லை என்றும், நுரையீரலில் பால் தேங்கியதால் மூச்சு திணறி குழந்தை இறந்துள்ளது என்றும் டாக்டா்கள் தெரிவித்துள்ளனர் என்றார். பிறந்து 50 நாட்களே ஆன பச்சிளங்குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் திண்டுக்கல் பகுதியில் சோகத்தை எற்படுத்தியுள்ளது.