கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 3-வது சுற்றில் 3.65 லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தப்படும் என்று ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் கலெக்டர் தீபக் ஜேக்கப் தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 3-வது சுற்றில் 3.65 லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தப்படும் என்று ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் கலெக்டர் தீபக் ஜேக்கப் தெரிவித்தார்.
ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் கோமாரி நோய் தடுப்பூசி பணி 3-வது சுற்று நடைபெறுகிறது. இதையொட்டி மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமை தாங்கி பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேசிய கால்நடை நோய் தடுப்புத்திட்டத்தின் கீழ் கால்நடைகளுக்கு 3-வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி முகாம் இன்று (புதன்கிழமை) முதல் தொடங்கப்பட உள்ளது. மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் அறிவிக்கப்படும் தேதிகளில் இந்த முகாம் நடைபெற உள்ளது. மாவட்டத்தில் 3 லட்சத்து 65 ஆயிரம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.
ஆதார் எண்
இந்த முகாம்களுக்கு வரும் கால்நடை உரிமையாளர்கள் தங்களின் ஆதார் எண் மற்றும் செல்போன் எண் ஆகியவற்றை தடுப்பூசி குழுவினரிடம் வழங்க வேண்டும். பின்னர் கால்நடைகளுக்கு காது வில்லைகள் அணிவிக்கப்பட்ட உடன் தடுப்பூசி போடப்படும். இந்த முகாம்களில் கால்நடை வளர்க்கும் விவசாயிகள், பொதுமக்கள் தங்கள் கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தி பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த கூட்டத்தில், கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் ராஜேந்திரன், உதவி இயக்குனர் மரியசுந்தர், துணை இயக்குனர் அருள்ராஜ், இளவரசு, செந்தில்குமார், ரவிச்சந்திரன், பால்வள துணை பதிவாளர் கோபி, ஆவின் துணை மேலாளர் நாகராஜ், கால்நடை டாக்டர்கள் பாலாஜி, வினோத், சுந்தர்ராஜ், வன கால்நடை அலுவலர் பிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






