வடமதுரை சவுந்தரராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா


வடமதுரை சவுந்தரராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா
x

வடமதுரை சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் இன்று (புதன்கிழமை) கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது.

திண்டுக்கல்

சவுந்தரராஜ பெருமாள் கோவில்

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையில் வரலாற்று சிறப்பு மிக்க சவுந்தரராஜ பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில், கடந்த 2006-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கும்பாபிஷேகம் நடந்தது.

கோவில் ஆகம விதிகளின்படி 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும். அதன்படி கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் பாலாலய பூஜையுடன் கும்பாபிஷேக திருப்பணிகள் தொடங்கப்பட்டன.

பெருமாள், சவுந்தரவல்லி தாயார் சன்னதி கர்ப்பகிரகங்களை சுற்றிலும் நீராழி அமைத்தல், கோவில் வளாகத்தில் மேற்கூரைகள் அமைத்தல் உள்ளிட்ட திருப்பணிகள் நடந்து முடிந்தது.

இன்று கும்பாபிஷேகம்

இதனையடுத்து இன்று (புதன் கிழமை) கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது. இதையொட்டி நேற்று முன்தினம் காலை சுதர்சன ஹோமத்துடன் சிறப்பு பூஜைகள் தொடங்கியது. இதைத்தொடர்ந்து பூர்ணாகுதி, புன்னிய நதியில் இருந்து தீர்த்தம் கொண்டு வருதல், வாஸ்து பூஜை, வாஸ்து ஹோமம், மகா தீபாராதனை, காயத்ரி ஹோமம், திவ்ய பிரபந்த சாற்றுமுறை உள்ளிட்ட யாக பூஜைகள் நடைபெற்றன.

இன்று காலை 9 மணியளவில் கோவில் கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. அதனைத்தொடர்ந்து மாலை திருக்கல்யாண உற்சவமும், இரவு கருட வாகனத்தில் பெருமாள் வீதிஉலா நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

இந்த விழாவுக்கான எற்பாடுகளை கோவில் தக்கார் விஸ்வநாத், செயல் அலுவலர் கற்பக வெண்ணிலா, திருப்பணி பொறுப்பாளர்கள் மற்றும் ஊர் மக்கள் செய்து வருகின்றனர்.

1 More update

Next Story