வடிவழகியம்மன் கோவில் தேரோட்டம்
வடிவழகியம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது.
கல்லக்குடி:
புள்ளம்பாடி ஒன்றியம் இ.வெள்ளனூர் கிராமத்தில் வடிவழகியம்மன், கருப்புசாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்கள் எழுந்தருளியுள்ள கோவில் திருவிழா, கடந்த மே மாதம் 24-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து மறுகாப்பு கட்டப்பட்டு, ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வாகனத்தில் அம்மன் வீதி உலா நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக நேற்று தேரோட்டம் நடைபெற்றது. தேரில் வடிவழகியம்மன் எழுந்தருளினார். தேரோட்டத்தில் வெள்ளனூர், இடங்கிமங்கலம், ராமநாதபுரம், இருதயபுரம், புள்ளம்பாடி, ந.சங்கேந்தி, பு.சங்கேந்தி, பெருவளநல்லூர் உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
தேர் கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து, மாலையில் கோவிலை வந்தடைந்தது. தேருக்கு முன்பு கருப்புசாமி குதிரை வாகனத்தில் அலங்கரிக்கப்பட்டு பல்லக்கில் தூக்கி வந்தனர். பக்தர்கள் வீடுகள் மற்றும் வீதிகளுக்கு முன்பு சாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்து வழிபட்டனர். இதைத்தொடர்ந்து இன்று(வியாழக்கிழமை) மாலை 6 மணிக்கு அய்யனார், சங்கிலி கருப்பு சாமிகளுக்கு ஊர்கூடி பொங்கல் வைத்து படையலிடும் நிகழ்ச்சியும், நாளை(வெள்ளிக்கிழமை) மாலை 6 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா மற்றும் திருவீதியுலாவுடன் திருவிழா நிறைவுபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம கரைக்காரர்கள், ஊர் முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் செய்திருந்தனர்.