வடுகபாளையம் மயானத்தில் குப்பைகளை கொட்டுவதால் பொதுமக்கள் அவதி-நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
வடுகபாளையம் மயானத்தில் குப்பைகளை கொட்டுவதால் பொதுமக்கள் கடும் அவதிப்படுகின்றனர். எனவே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
பொள்ளாச்சி
வடுகபாளையம் மயானத்தில் குப்பைகளை கொட்டுவதால் பொதுமக்கள் கடும் அவதிப்படுகின்றனர். எனவே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
பொதுமக்கள் அவதி
பொள்ளாச்சி வடுகபாளையத்தில் மயானம் உள்ளது. இங்கு குமரன் நகர், வடுகபாளையம் பகுதிகளில் இறக்கும் நபர்களின் உடலை அடக்கம் மற்றும் தகனம் செய்யப்படுகிறது. இந்த நிலையில் மயானத்தில் நுழைவு பகுதியில் நகராட்சி மூலம் நுண் உரமாக்கல் மையம் தொடங்கப்பட்டது.
இந்த மையத்திற்கு வடுகபாளையம் மற்றும் அருகில் உள்ள பகுதிகளில் பொதுமக்களிடம் இருந்து குப்பைகளை சேகரித்து கொண்டு வரப்படுகிறது. பின்னர் குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு உரமாக்கப்படுகிறது. இந்த நிலையில் தற்போது பிளாஸ்டிக் கழிவுகள் உள்ளிட்ட குப்பைகளை மூட்டை கட்டி மயானத்தில் போட்டு உள்ளனர். இதனால் பொதுமக்கள் கடும் அவதிப்படுகின்றனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-
நடவடிக்கை எடுக்க கோரிக்கை
மயானத்தின் நுழைவு பகுதியில் நுண் உரமாக்கல் மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு கொண்டு வரப்படும் குப்பைகளை தரம் பிரித்து, பிளாஸ்டிக் கழிவுகள், ஊசிகள் போன்ற குப்பைகளை மூட்டை கட்டி போட்டு குவித்து வைத்து உள்ளனர். இதனால் மயானம் குப்பை மேடாக காட்சி அளிக்கிறது.
இதன் காரணமாக பொது சுகாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து நகராட்சி அதிகாரிகளிடம் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே பொதுமக்கள் நலன் கருதி மயானத்தில் கொட்டப்படும் கழிவுகளை அகற்ற அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.