வைகை கரை சாலை பணிகள் விரைவில் முடிக்கப்படும்-அமைச்சர் எ.வ.வேலு உறுதி


வைகை கரை சாலை பணிகள் விரைவில் முடிக்கப்படும்-அமைச்சர் எ.வ.வேலு உறுதி
x

மதுரை நெல்பேட்டை-அவனியாபுரம் இடையே மேம்பாலம் கட்டப்படும். வைகை கரை சாலை பணிகள் விரைவில் முடிக்கப்படும் என அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.

மதுரை

மதுரை

மதுரை நெல்பேட்டை-அவனியாபுரம் இடையே மேம்பாலம் கட்டப்படும். வைகை கரை சாலை பணிகள் விரைவில் முடிக்கப்படும் என அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.

சாலை பாதுகாப்பு

சாலை பாதுகாப்பு மற்றும் சாலை விபத்து தடுப்பு விழிப்புணர்வு தொடர்பான அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. அமைச்சர் மூர்த்தி முன்னிலை வகித்தார். அமைச்சர் எ.வ.வேலு தலைமை தாங்கினார். கூட்டத்தில் கலெக்டர் அனிஷ் சேகர், மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார், எம்.எல்.ஏ.க்கள் கோ.தளபதி, பூமிநாதன், வெங்கடேசன், மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன், போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், வருவாய் அலுவலர் சக்திவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ஓட்டுனர்கள் சங்கம், லாரி உரிமையாளர்கள் சங்கம், தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம், நுகர்வோர் பாதுகாப்பு சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது:-

தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலையில் 30 சதவீத விபத்துக்களும், மாநில நெடுஞ்சாலைகளில் 33 சதவீத விபத்துக்களும் நடக்கின்றன. கடந்த 2021-ம் ஆண்டில் இருசக்கர வாகன விபத்தில் 6,223 பேரும், கார் விபத்துகளில் 2,467 பேரும், லாரி போன்ற சரக்கு வாகன விபத்துகளில் 2,144 பேர், அரசுப் பஸ் விபத்துகளில் 647 பேர், தனியார் பஸ் விபத்துகளில் 302 பேர், ஆட்டோ விபத்துகளில் 323 பேர், வேன் போன்ற சுற்றுலா வாகன விபத்துகளில் 1,140 பேர், பிற வாகன விபத்துகளில் 1,666 பேர் என மொத்தம் 14 ஆயிரத்து 912 நபர்கள் சாலை விபத்துகளில் உயிரிழந்து உள்ளார்கள். அதில் மதுரை மாவட்டத்தில் மட்டும் 2,282 விபத்துகள் ஏற்பட்டு 707 பேர் உயிரிழந்து உள்ளனர்.

ரூ.100 கோடி

போக்குவரத்து நெரிசலை குறைத்திடும் நோக்கில், மதுரை கோரிப்பாளையம் சந்திப்பில் சாலை மேம்பாலம் அமைக்கப்படும். மதுரை சுற்றுச்சாலை சிவகங்கை சாலை சந்திப்பில் ஒரு மேம்பாலமும் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. பெரியார் பஸ் நிலையம் முதல் யானைக்கல் வரை உயர்மட்ட பாலம் அமைக்கப்படும். மதுரை நெல்பேட்டை அண்ணாசிலை முதல் அவனியாபுரம் சாலை சந்திப்பு பெரியார் சிலை வரை உயர்மட்ட பாலம் அமைக்க திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடக்கிறது. திண்டுக்கல் மேம்பாலத்தில் இருந்து சமயநல்லூர் நான்கு வழிச்சாலை வரை புதிதாக சாலை அமைக்க ரூ.100 கோடி மதிப்பில் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. மதுரை வைகை கரையின் இருபுறமும் சாலை அமைக்கப்பட்டு வருகிறது. அதில் 3 இடங்களில் சாலை பணிகள் தடைப்பட்டு இருப்பதாக கோ.தளபதி எம்.எல்.ஏ. என்னிடம் கூறினார். இந்த பிரச்சினை தீர்க்கப்பட்டு, இந்தாண்டே இந்த சாலை பணிகள் விரைந்து முடிக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.


Related Tags :
Next Story