அம்மன் கோவில்களில் வைகாசி தேரோட்டம்


தினத்தந்தி 5 Jun 2023 11:55 PM IST (Updated: 7 Jun 2023 3:19 PM IST)
t-max-icont-min-icon

கீழப்பனையூர், குளமங்கலம், மேற்பனைக்காடு அம்மன் கோவில்களில் வைகாசி தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

புதுக்கோட்டை

காமாட்சி அம்மன்

அரிமளம் ஒன்றியம், கீழப்பனையூர் கிராமத்தில் காமாட்சி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் வைகாசி பெருவிழா கடந்த மாதம் 26-ந் தேதி பூச்சொரிதல் விழாவுடன் தொடங்கியது. தொடர்ந்து காப்புகட்டுதல், பொங்கல் விழாவும் நடைபெற்றது.

இதையடுத்து இன்று பால்குடம், காவடி எடுத்தல், அலகு குத்தி பக்தர்கள் ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து தீமிதி விழா நடைபெற்றது.

தேரோட்டம்

தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இ்ன்று மாலை நடைபெற்றது. இதையடுத்து சிறப்பு அலங்காரத்தில் காமாட்சி அம்மன், விநாயகர் ஆகிய சுவாமிகள் திருத்தேரில் எழுந்தருளினர். இதையடுத்து தாஞ்சூர் கிராமத்தார்கள் தேரை தொட்டு கொடுத்த பிறகு ஊரார்கள் மற்றும் கிராமமக்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

தேரை முக்கிய வீதிகள் வழியாக பக்தர்கள் இழுத்து வந்து கோவில் நிலையை வந்தடைந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், கோவில் பூசாரிகள், ஊரார்கள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.

மழைமாரியம்மன் கோவில்

கீரமங்கலம் அருகே குளமங்கலம் வடக்கு மணிவர்ண மழைமாரியம்மன் கோவில், மேற்பனைக்காடு மழைமாரியம்மன் கோவில்களில் காப்புக் கட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனையும், அம்மன் வீதி உ லாவும் நடைபெற்று வந்தது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 2 கோவில்களில் நடைபெற்றது. இதையடுத்து 2 கோவில்களிலும் காய், கனி, மலர்கள், தோரணங்களால் அலங்கரிக்கப்பட்ட தேர்களில் சுவாமிகள் எழுந்தருளினர்.

இதில் குளமங்கலம் வடக்கு மணிவர்ண மழைமாரியம்மன் கோவிலில் விநாயகர் வீற்றிருக்கும் தேரை பெண்களும், குழந்தைகளும் இழுத்து செல்ல, மணிவர்ண மழைமாரியம்மன் வீற்றிருக்கும் தேரை மேள தாளம் முழங்க, வாணவேடிக்கைகளுடன் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். தேர்கள் புஞ்சை நிலங்களில் செல்லும் போது சில இடங்களில் பக்தர்களால் இழுக்க முடியாத நிலையில் டிராக்டர்கள் மூலம் தேர்களை இழுத்து சென்றனர்.

தெப்ப உற்சவம்

மேற்பனைக்காடு மழைமாரியம்மன் கோவில் தேரை திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். தேர்கள் முக்கிய வீதிகள் வழியாக பக்தர்கள் இழுத்து வந்து கோவில் நிலையை வந்தடைந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்ந்து நாளை (செவ்வாய்க்கிழமை) தீர்த்தவாரியும், நாளை மறுநாள் (புதன்கிழமை) தெப்ப உற்சவமும் நடக்கிறது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினரும், பாதுகாப்பு ஏற்பாடுகளை கீரமங்கலம் போலீசாரும் செய்து வருகின்றனர்.


Next Story