சோலைமலை முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா தொடங்கியது - திரளான பக்தர்கள் சாமி தரிசனம்


சோலைமலை முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா தொடங்கியது - திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
x

சோலைமலை முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா தொடங்குகிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மதுரை

அழகர்கோவில்

சோலைமலை முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா தொடங்குகிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சோலைமலை முருகன் கோவில்

முருகப்பெருமானின் ஆறாவது படைவீடு சோலைமலை முருகன் கோவிலில் நடைபெறும் திருவிழாவில் வைகாசி மாதம் நடைபெறும் வசந்த உற்சவ விழாவும் ஒன்றாகும். இந்த திருவிழாவானது நேற்று அங்குள்ள சஷ்டி மண்டப வளாகத்தில் தொடங்கியது. இதில் மூலவர் வள்ளி, தெய்வானை, சுப்பிரமணிய சுவாமிக்கும், உற்சவர் சுவாமிக்கும் காப்பு கட்டி பூஜைகள் தொடங்கியது.

இதை தொடர்ந்து காலையிலும், மாலையிலும் பூஜைகள் சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள், மேளதாளம் முழங்க சண்முகர்சுவாமிக்கும், வள்ளி தெய்வானைக்கும் சிறப்பு மகா அபிஷேகம், லட்சார்ச்சனைகள், மகா தீபாராதனைகள் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று நெய் விளக்கேற்றி சாமி தரிசனம் செய்தனர்.

லட்சார்ச்சனை

இதை தொடர்ந்து இந்த திருவிழாவில் தினமும் லட்சார்ச்சனையும், மாலையில் சகல பரிவாரங்களுடன் சுவாமி புறப்பாடு நடைபெறும். தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வாக வருகிற ஜூன் மாதம் 2-ந் தேதி (வெள்ளிக்கிழமை) அன்று வைகாசிவிசாகம் திருவிழா நடந்து நிறைவு பெறுகிறது. இதில் மூலவர், உற்சவர் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடைபெறும்.

இந்த திருவிழா தொடங்கியதையொட்டி மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, தேனி, சென்னை, விருதுநகர், ராமநாதபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வந்து சாமி கும்பிட்டு செல்கின்றனர். இந்த திருவிழாவின் போது நூபுர கங்கையில் பக்தர்கள் புனித நீராடி வந்து அங்குள்ள ராக்காயி அம்மனையும் தரிசனம் செய்தனர்.

திருவிழாவுக்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், துணை ஆணையர் ராமசாமி, மற்றும் கண்காணிப்பாளர்கள், உள்துறை பணியாளர்கள் செய்து வருகின்றனர்.


Next Story