உலகளந்த பெருமாள் கோவிலில் வைகாசி விசாக உற்சவம்
திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் வைகாசி விசாக உற்சவம் வருகிற 29-ந் தேதி தொடங்குகிறது
திருக்கோவிலூர்
திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் வைகாசி விசாக உற்சவம் வருகிற 29-ந் தேதி தொடங்குகிறது.
கருட சேவை
ஆன்மீகத்தில் பிரசித்தி பெற்றதும், வரலாற்று சிறப்பு வாய்ந்ததுமான திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் வைகாசி விசாக ஸ்ரீ புஷ்பவல்லி தாயார் ஸ்ரீ ஜெகதீஸ் பெருமாள் பூச்சாற்று உற்சவம் வசந்தோற்சவமாக நடக்கிறது. இதையொட்டி வருகிற 29-ந் தேதி திங்கட்கிழமை விசேஷ அலங்காரம் மற்றும் சாற்றுமறையுடன் விழா தொடங்குகிறது.
தொடர்ந்து வருகிற 30, 31 மற்றும் ஜூன் 1-ந் தேதிகளில் சாமி புறப்பாடு மற்றும் மண்டகப்பாடி நிகழ்ச்சி நடக்கிறது. 2-ந் தேதி காலை 7 மணி அளவில் கருட சேவை புறப்பாடு நிகழ்ச்சியும் 11 மணியளவில் ஸ்ரீ புஷ்பவல்லிதாயார் சமேத ஸ்ரீ தேகளீச பெருமாள் மற்றும் நம்மாழ்வார் விசேஷ அலங்கார திருமஞ்சனம் மற்றும் சாற்றுமறை நிகழ்ச்சி நடக்கிறது. மேற்கண்ட 5 நாட்களிலும் மாலையில் ஆன்மிக சொற்பொழிவு, நாதஸ்வர கச்சேரியும் நடக்கிறது.
பூச்சாற்று உற்சவம்
பின்னர் 3-ந் தேதி(சனிக்கிழமை) முதல் 5-ந் தேதி வரை 3 நாட்களுக்கு ஸ்ரீ புஷ்பவல்லி தாயாருக்கு பூச்சாற்று உற்சவம் நடக்கிறது.
இந்த 3 நாட்களில் தினமும் மாலை 4 மணிக்கு ஸ்ரீ புஷ்பவல்லி தாயார் புறப்பாடாகி ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளுகிறார். மாலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை வேதபாராயணமும், இரவு 8 மணி முதல் 9 மணி வரை சாற்று மறை நிகழ்ச்சியும் நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை கோவில் மடாதிபதி ஜீயர் சாமிகள் உத்தரவின்பேரில் கோவில் நிர்வாகி கோலாகலன் என்கிற கிருஷ்ணன் மேற்பார்வையில் விழா குழுவினர்கள், உபயதாரர்கள் மற்றும் பக்தர்கள் முன்னின்று செய்து வருகின்றனர்.