'தொண்டர்களை வைகோ ஏமாற்றுவது சரியல்ல'
வைகோ தனது கட்சியின் நிலையை உணராமல் தொண்டர்களை ஏமாற்றுவது சரியல்ல என்று முன்னாள் எம்.எல்.ஏ. துரைசாமி திருப்பூரில் கூறினார்.
சங்கத்தை கட்டுப்படுத்தாது
ம.தி.மு.க. மாநில அவைத்தலைவராக இருந்த முன்னாள் எம்.எல்.ஏ. சு.துரைசாமி, அந்த கட்சியில் இருந்து விலகுவதாக ஏற்கனவே அறிவித்து தலைமைக்கு கடிதம் அனுப்பி விட்டார். இந்த நிலையில் நேற்று திருப்பூரில் நிருபர்களிடம் கூறியதாவது:-
கோவை மாவட்ட திராவிட பஞ்சாலை தொழிலாளர் முன்னேற்ற சங்கம் 1960-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கம் என்பது வேறு. எம்.எல்.எப்., எல்.பி.எப்., ஐ.என்.டி.யு.சி. என்பது வேறு. அவை மத்திய அமைப்புகளாகும். அமைப்புகள் எதுவும் சங்கத்தை கட்டுப்படுத்தாது.
எந்த ஒரு தொழிற்சங்கமும், தொழிற்சங்கத்தின் சட்டதிட்ட விதிகளுக்கு மட்டுமே கட்டுப்படுமே தவிர வேறு யாருக்கும் கட்டுப்படாது. அந்த அடிப்படையில் தான் கோவை மாவட்ட திராவிட பஞ்சாலை தொழிலாளர் முன்னேற்ற சங்கம் தொடர்ந்து இயங்கி வருகிறது. ஆனால் வைகோ இதை தொழிற்சங்க பிரச்சினை என்று சொல்லியிருக்கிறார்.
தி.மு.க.வுடன் எனக்கு பகையை உண்டாக்கும் கோணத்தில் வைகோ பேசுகிறார். வைகோவின் மகன் தேர்தலில் போட்டியிட முயன்றபோது வாரிசு அரசியலை கடுமையாக நான் எதிர்த்தேன்.
தொண்டர்களை ஏமாற்றுவது சரியல்ல
வரும் நாடாளுமன்ற தேர்தலில் தனிச்சின்னத்தில் போட்டியிடுவீர்களா என்று வைகோவிடம் பத்திரிகையாளர்கள் கேட்டபோது அப்போது பார்க்கலாம் என்கிறார். தனிக்கட்சி நடத்தும் முடிவுக்கு வந்து விட்டால் அதற்கான தைரியம் வேண்டும். 25 லட்சம் பேர் கட்சியில் உறுப்பினர்கள் இருப்பதாக கூறுகிறார். ஆனால் எண்ணிக்கை விவரமே முரணாக இருக்கிறது.
வைகோ தனது கட்சியின் உண்மை நிலையை உணராமல் எதார்த்தமான தொண்டர்களை ஏமாற்றுவது சரியல்ல என்பது எனது நிலைபாடு. இனியும் தனியாக கட்சியை நடத்தி கொண்டு செல்வது என்பது ஏமாற்றுவதற்கு பயன்படுமே தவிர வேறு ஒன்றும் இல்லை. எனது நாணயம் வேறு யாருக்கும் இல்லை என்று வைகோ சொன்னார். நான் அதற்குள் செல்லவில்லை. சென்றால் மிகவும் சிக்கலாக போய்விடும். நான் அவருடன் பழகியிருப்பதால் அதுபற்றி பேசவிரும்பவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.