வைகோ மிகப்பெரிய போராளி-சபாநாயகர் அப்பாவு பேச்சு
நெல்லையில் நடந்த ஆவணப்படம் வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சபாநாயகர் அப்பாவு பேசும்போது, வைகோ மிகப்பெரிய போராளி, என்றார்.
நெல்லையில் நடந்த ஆவணப்படம் வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சபாநாயகர் அப்பாவு பேசும்போது, வைகோ மிகப்பெரிய போராளி, என்றார்.
ஆவணப்படம்
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ குறித்து 'மாமனிதர் வைகோ'' என்ற தலைப்பில் ஆவணப்படம் தயார் செய்யப்பட்டு உள்ளது. தலைமை நிலைய செயலாளர் துரை வைகோவின் இயக்கத்தில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த படம் நெல்லை முத்துராம் தியேட்டரில் நேற்று திரையிடப்பட்டது.
இதில் சபாநாயகர் அப்பாவு, முன்னாள் மத்திய மந்திரி ஆர்.தனுஷ்கோடி ஆதித்தன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.
மிகப்பெரிய போராளி
சபாநாயகர் அப்பாவு பேசுகையில், ''வைகோ மிகப்பெரிய போராளி, ஓய்வறியாமல் தமிழக மக்களுக்காக உழைத்து வருகிறார். சவால்களை முறியடித்து தலை நிமிர்ந்து நிற்கும் அரசியல்வாதி அவர். 56 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையை ஆவணப்படமாக்கி உள்ளனர். இந்த படத்தை தயாரித்துள்ள ம.தி.மு.க. தலைமை நிலைய செயலாளர் துரை வைகோவை பாராட்டுகிறேன்'' என்றார்.
முன்னாள் மத்திய மந்திரி ஆர்.தனுஷ்கோடி ஆதித்தன் பேசுகையில், ''வைகோ கொள்கையில் விடாப்பிடியானவர், அவர் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடும் வரை போராடினார். தமிழக மக்களுக்காக தொடர்ந்து போராடி வருகிறார். அவரது வாழ்க்கை குறித்த ஆவணப்படம் சிறப்பாக தயாரித்து வெளியிடப்பட்டு உள்ளது'' என்றார்.
இரட்டைக்குழல் துப்பாக்கி
துரை வைகோ ஏற்புரை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறுகையில், '' சனாதன சக்திகள் ஆங்கிலம் அன்னியமொழி, அதை கைவிட்டு இந்தியை படிக்க வேண்டும் என்று கூறி புதிய குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறார்கள். சனாதன சக்திகளை தமிழ்நாட்டை விட்டு விரட்டி அடிக்க வேண்டும். அதற்கு ம.தி.மு.க.வும், தி.மு.க.வும் இரட்டைக்குழல் துப்பாக்கி போல் செயல்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் சதன் திருமலைக்குமார் எம்.எல்.ஏ., நெல்லை மாநகர மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் கே.எம்.ஏ.நிஜாம், காங்கிரஸ் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் கரிசல் சுரேஷ், இந்திய கம்யூனிஸ்டு சுடலை, த.ம.மு.க. கண்மணி மாவீரன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பாட்டபத்து முகமது அலி,
ம.தி.மு.க. நெல்லை புறநகர் மாவட்ட செயலாளர் ரைமண்டு, சேவியர் கல்லூரி முதல்வர் மரியதாஸ், விஜயானந்த சரஸ்வதி மவுனகுரு சுவாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். துணை பொதுச்செயலாளர் தி.மு.ராஜேந்திரன் தொகுத்து வழங்கினார்.