'ஆசையை தூண்டி வலை விரிக்கும் வைரஸ் பரவல்'
'ஸ்மார்ட் போன்' பயன்படுத்துபவர்களின் ஆசையைத் தூண்டும் விதமாக 'லிங்க்' அனுப்பி செல்போன்களை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் வைரஸ்கள் குறித்து எச்சரிக்கையுடன் இருப்பது அவசியமாகும்.
இலவச பரிசு
இலவசங்களுக்கு மயங்குபவர்கள் உள்ளதையும் இழந்து விட்டு தவிக்கும் நிலை தான் உருவாகும் என்பதை பலரும் இன்னும் உணராத நிலையே உள்ளது. விஞ்ஞான வளர்ச்சி விண்ணைத் தொட்டாலும், வசதி வாய்ப்புகள் ஏராளமாக இருந்தாலும் இலவசங்கள் என்றதும் முண்டியடிக்கும் போக்கு பலரிடம் உள்ளது. அதன் மூலம் சிக்கலில் மாட்டி அவதிப்படும் நிலையும் உள்ளது. அந்த வகையில் கடந்த சில நாட்களாக ஆசையைத் தூண்டும் விதமான ஒரு சில வைரஸ்கள் சமூக வலைத்தளங்களில் உலா வருவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி தனியார் மோட்டார் நிறுவனங்களின் ஆண்டு விழா சிறப்புப் பரிசு என்ற பெயரில் "ஸ்மார்ட் போன்களுக்கு" லிங்க் அனுப்பப்படுகிறது. அந்த லிங்கை தொட்டு திறந்தால் அவ்வளவு தான். நமது 'ஸ்மார்ட் போனுக்குள்' நுழையும் வைரஸ் மூலம் நமது போன் முழுமையாக ஹேக்கர்களின் கட்டுப்பாட்டுக்குள் சென்று விடுகிறது. அதன் பிறகு நமது எண்ணிலிருந்து நமக்குத் தெரியாமலேயே நம்மிடமுள்ள குழுக்களுக்கு அந்த 'லிங்க்' அனுப்பப்படுகிறது.
முக்கிய ஆவணங்கள்
நமது 'ஸ்மார்ட் போன்' ஹேக்கர்களின் கட்டுப்பாட்டுக்குள் செல்வதால் வங்கிக் கணக்கு உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை கைப்பற்றவும், பணப்பரிமாற்றம் மேற்கொள்ளவும் வாய்ப்புள்ளது. அத்துடன் நமது போனைப் பயன்படுத்தி சமூக விரோதச் செயல்கள் மேற்கொள்ளும் அபாயம் உள்ளது. எனவே இதுபோன்ற ஆசையைத் தூண்டும் விதமான 'லிங்க்' எதையும் திறக்காமல் இருப்பது நல்லது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுபோல், உங்கள் வாட்ஸ்- அப்பில் புதிய அம்சங்கள் பெற அப்டேட் செய்யுங்கள், 50 ஜி பி இலவச இணையம் பெறுங்கள், பிங்க் வாட்ஸ்-ஆப் பெறுங்கள் உள்ளிட்ட பலவிதங்களில் மோசடி லிங்க் அனுப்பப்படுவதாக கூறப்படுகிறது. இதுபோன்ற மோசடி வைரஸ் லிங்குகள் தானாகவே மீண்டும் மீண்டும் சமூக வலைத்தள குழுக்களுக்கு செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஆன்டி வைரஸ்கள்
இதனால் இந்த வைரஸின் வலையில் அடுக்கடுக்காக பலரும் சிக்கும் நிலை ஏற்படுகிறது. இதுதவிர நமது கட்டுப்பாட்டில் இல்லாமல் தொடர்ச்சியாக மற்ற குழுக்களுக்கு இந்த 'லிங்க்' அனுப்பப்படுவதால் குழுவில் உள்ளவர்களின் ஏச்சுக்கும், பேச்சுக்கும் ஆளாகும் நிலை ஏற்படுகிறது.
எனவே இதுபோன்ற ஆசையைத் தூண்டும் லிங்க் எதையும் திறக்காமல் இருப்பது நல்லது.மேலும் தங்கள் செல்போன்களில் எப்போதும் வீரியமான ஆன்டி வைரஸ்களை உள்ளீடு செய்து வைத்திருப்பது மிகவும் அவசியமாகும்.