நாகர்கோவில் வலம்புரிவிளை குப்பை கிடங்கில் 2-வது நாளாக எரியும் தீயை அணைக்கும் பணி தீவிரம்
நாகர்கோவில் வலம்புரிவிளை குப்பை கிடங்கில் 2-வது நாளாக தீ பற்றி எரிந்து வருகிறது. அதை அணைக்கும் பணியில் 35 தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். அதை மேயர் மகேஷ், ஆணையர் ஆனந்த் மோகன் ஆகியோர் ஆய்வு நடத்தினார்கள்.
நாகர்கோவில்:
நாகர்கோவில் வலம்புரிவிளை குப்பை கிடங்கில் 2-வது நாளாக தீ பற்றி எரிந்து வருகிறது. அதை அணைக்கும் பணியில் 35 தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். அதை மேயர் மகேஷ், ஆணையர் ஆனந்த் மோகன் ஆகியோர் ஆய்வு நடத்தினார்கள்.
குப்பை கிடங்கில் தீ
நாகர்கோவில் பீச் ரோட்டில் வலம்புரிவிளை குப்பை கிடங்கு உள்ளது. இங்கு நாகர்கோவில் பகுதியில் சேகரிக்கப்படும் குப்பை கொட்டப்பட்டு வருகிறது. இதனால் அந்த பகுதியில் குப்பைகள் மலைபோல் குவிந்து உள்ளன. இதில் அடிக்கடி தீ விபத்து நடந்து வருகிறது. அதன்படி நேற்றுமுன்தினம் காலை 11 மணியளவில் குப்பை கிடங்கில் தீ பிடித்து எரிய தொடங்கியது
இதை கண்ட பொதுமக்கள் நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் 2 வண்டிகளில் விரைந்து வந்து குப்பை கிடங்கில் எரியும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் தீ கட்டுக்குள் வரவில்லை. அதைத்தொடர்ந்து கன்னியாகுமரி, திங்கள்சந்தை தீயணைப்பு நிலையங்களில் இருந்தும் வண்டிகள் வரவழைக்கப்பட்டன. 4 தீயணைப்பு வண்டிகளில் தண்ணீரை எடுத்து வந்து தீயை அணைக்கும் பணியில் வீரர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.
மேயர்- ஆணையர் ஆய்வு
இந்த தீயால் அப்பகுதி முழுவதும் புகை மூட்டமாக காட்சி அளிக்கிறது. சாலையில் வாகனங்கள் செல்லமுடியாத அளவிற்கு புகை மூட்டம் உள்ளது. நேற்று 2-வது நாளாக குப்பை கிடங்கில் தீ எரிந்து கொண்டே இருந்தது. அதை அணைக்கும் பணியில் 35 தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
நேற்று காலை நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், ஆணையர் ஆனந்த் மோகன், மாநகர் நல அதிகாரி விஜயசந்திரன் ஆகியோர் தீயை அணைக்கும் பணியை ஆய்வு செய்தனர். அப்போது தீயணைப்பு வீரர்களிடம் தீ அணைக்கும் பணியில் தீவிரமாகவும், பாதுகாப்புடனும் செயல்பட வேண்டும் என மேயர் மகேஷ் கூறினார்.