வளரி வீரன், ஊர்க்காவல் வீரன் சிற்பங்கள் கண்டெடுப்பு


வளரி வீரன், ஊர்க்காவல் வீரன் சிற்பங்கள் கண்டெடுப்பு
x

காரியாபட்டி அருகே வளரி வீரன், ஊர்க்காவல் வீரன் சிற்பங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

விருதுநகர்

காரியாபட்டி,

காரியாபட்டி அருகே வளரி வீரன், ஊர்க்காவல் வீரன் சிற்பங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

போர் கருவி

காரியாபட்டி அருகே தோப்பூர் கிராமத்தில் வளரி வீரன் மற்றும் ஊர்க்காவல் வீரன் சிற்பங்கள் இருப்பதாக கிழவனேரியை சேர்ந்த கண்ணன் கொடுத்த தகவலின்படி பாண்டியநாடு பண்பாட்டு மைய தொல்லியல் கள ஆய்வாளர்களான ஸ்ரீதர், முனைவர் தாமரைக்கண்ணன், சிவகாசி பிரபு மற்றும் உதவிப்பேராசிரியர் ரமேஷ் ஆகியோர் அங்கு சென்று கள ஆய்வில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-

தமிழகத்தில் நம் முன்னோர்கள் கையாண்ட போர்முறை கருவிகளில் வளரியும் ஒன்று. இந்த வளரி பற்றிய குறிப்புகள் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. குறிப்பாக புறநானூறு பாடல்களில் வளரி பற்றிய செய்திகள் இடம் பெற்றுள்ளன. தற்போது கண்டறியப்பட்ட வளரி வீரன் சிற்பமானது 3 அடி உயரமும், 2½ அடி அகலமும் கொண்ட பலகை கல்லில் புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது.

வீர மரணம்

வீரனது தலையில் இடது புறம் சரிந்த கொண்டையும், நீண்ட காதுகளும், மார்பில் வீரச்சங்கிலி, இடையில் இடைக்கச்சையும் செதுக்கப்பட்டுள்ளது. இடையில் வளரி இடம்பெற்றுள்ளது.

கைகளில் அணிகலன்கள் செதுக்கப்பட்டுள்ளது. இடது கையானது வளரியை பிடித்த படியும், வலது கையில் வாளினை உயர்த்திப் பிடித்தபடியும் செதுக்கப்பட்டுள்ளது. இவ்வீரனுக்கு வலது புறத்தில் அவரது மனைவி மலர் சென்டினை பிடித்தபடி ஆபரணங்களுடன் நேர்த்தியாக வடிக்கப்பட்டுள்ளது. இவ்விரு சிற்பத்திற்கு மேல் புறத்தில் தோரணம் போன்ற அமைப்பு செதுக்கப்பட்டுள்ளது. இந்த சிற்பத்தின் வடிவமைப்பை வைத்துப் பார்க்கும்போது போரில் வீர மரணம் அடைந்த வீரனுக்கு எடுக்கப்பட்ட நடுகல் என கூறலாம்.

மேலும் இந்த சிற்பத்தின் அமைப்பை வைத்து விஜயநகர பேரரசு காலத்தை சேர்ந்ததாகவும், 16-ம் நூற்றாண்டை சேர்ந்த சிற்பமாகவும் கருதலாம்.

காவல் வீரன் சிற்பம்

வளரி வீரன் சிற்பத்திற்கு இடதுபுறம் ஒரு வீரன் வணங்கியபடி தனிச் சிற்பம் காணப்படுகிறது. இந்த சிற்பம் 3 அடி உயரத்தில் செதுக்கப்பட்டுள்ளது. இவ்வீரனின் இடையில் குறுவாள் இடம் பெற்றுள்ளது. காலின் அடியில் வேட்டை நாயின் சிற்பமும் இடம்பெற்றுள்ளது. இந்த வீரன் காவலில் ஈடுபடும் போது துணையாக இந்த நாய் இருந்திருக்க வேண்டும். இவ்வீரன் ஊர்காவலின்போது இறந்திருக்க வேண்டும். வீரனோடு நாயும் இறந்திருக்க வேண்டும். அதன் காரணமாக நடுகல் எடுத்திருக்க வேண்டும். இந்த சிற்ப அமைப்பை பார்க்கும் போது நாயக்கர் காலத்தை சேர்ந்ததாக கருதலாம். இந்த இரு சிற்பங்களுக்கு சற்று தொலைவில் கட்டிட இடிபாடுகளின் அருகே ஒரு வீரன் சிற்பமும் அவரது மனைவி சிற்பமும் வணங்கியபடி காணப்படுகிறது. மேற்கண்ட சிற்பங்களை பார்க்கும்போது தோப்பூர் முற்காலங்களில் சிறந்து விளங்கி வந்துள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story