வாழவல்லான் குடிநீரேற்று நிலையத்திலிருந்து ஓரிரு நாட்களில் குடிநீர் வினியோகம்: ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. தகவல்


வாழவல்லான் குடிநீரேற்று நிலையத்திலிருந்து ஓரிரு நாட்களில் குடிநீர் வினியோகம்: ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. தகவல்
x
தினத்தந்தி 21 Sep 2023 6:45 PM GMT (Updated: 21 Sep 2023 6:46 PM GMT)

வாழவல்லான் குடிநீரேற்று நிலையத்திலிருந்து ஓரிரு நாட்களில் குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்று ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி

ஏரல்:

வாழவல்லான் குடிநீரேற்று நிலையத்திலிருந்து ஓரிரு நாட்களில் குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்று ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.

வாழவல்லான் குடிநீரேற்று நிலையம்

பருவமழை பொய்த்து போனதால் தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் வறண்டு போனது. இதனால் வாழவல்லான் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் நீரேற்று நிலையம் மூலம் தூத்துக்குடி துறைமுகம், ரெயில்வே காலனி மற்றும் வாலவல்லான், அகரம், உமரிக்காடு, முக்காணி, பழையகாயல், கொற்கை, மாரமங்கலம் உள்பட பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் தடைபட்டது. இதைதொடர்ந்து பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இத்தண்ணீர் வாழவல்லான் தடுப்பணை வந்தடைந்தது.

எம்.எல்.ஏ. ஆய்வு

இதை தொடர்ந்து ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ வாழவல்லான் குடிநீர் வடிகால் வாரிய நீரேற்று நிலையத்துக்கு சென்று அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினார். அங்கு குடிநீர் சுத்திகரிப்பு பணியை பார்வையிட்டார். மேலும், இந்த பணிகளை விரைந்து முடித்து குடிநீர் வினியோகத்தை தொடங்க வேண்டும் என அதிகாரிகளை அவர் கேட்டுக் கொண்டார். பின்னர் அவர் கூறுகையில், ஓரிரு நாட்களில் வாழவல்லான் குடிநீரேற்று நிலையத்திலிருந்து குடிநீர் வினியோகம் தொடங்கப்படும், என தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் ஏரல் தாசில்தார் கைலாச குமாரசாமி, குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் ராமசாமி, ஏரல் பேரூர் தி.மு.க. செயலாளர் ராயப்பன், உமரிக்காடு பஞ்சாயத்து துணைத்தலைவர் பாஸ்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அடிக்கல் நாட்டுவிழா

மேலும், ஆழ்வார்திருநகரி யூனியன் குளத்துக்குடியிருப்பில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 15.55 லட்சம் மதிப்பீட்டில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்தநிகழ்ச்சிக்கு ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் ஆழ்வார்திருநகரி யூனியன் தலைவர் ஜனகர், ஏரல் தாசில்தார் கைலாச குமாரசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.


Next Story