காதல் விவகாரத்தில் வாலிபரை வேனில் கடத்தி தாக்குதல்


காதல் விவகாரத்தில் வாலிபரை வேனில் கடத்தி தாக்குதல்
x

காதல் விவகாரத்தில் வாலிபரை வேனில் கடத்தி தாக்கினர்.

திருச்சி

தா.பேட்டை:

பெண்ணுடன் காதல்

நாமக்கல் மாவட்டத்தை சேந்தமங்கலம் தாலுகா, போடிநாயக்கன்பட்டி மண்கரடு பகுதியை சேர்ந்தவர் ரெங்கசாமி. இவரது மகன் நவீன்குமார்(வயது 23). இவர் கேட்டரிங் படித்துவிட்டு மராட்டியம் மாநிலத்தில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை பார்த்து வருகிறார்.

இந்தநிலையில் போடிநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை கடந்த 8 மாதங்களாக நவீன்குமார் காதலித்து வந்ததாகவும், இதையறிந்த அந்த பெண்ணின் தம்பி நித்திஷ், நவீன்குமாரிடம் சத்தம் போட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்கு இடையே முன்விரோதம் ஏற்பட்டது.

கத்தியால் கீறி....

இந்தநிலையில் வயிற்றுவலி காரணமாக தா.பேட்டையை அடுத்த மாணிக்கபுரம் கிராமத்தில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கி சிகிச்சை பார்ப்பதற்காக நவீன்குமார் வந்துள்ளார். இதையறிந்த நித்திஷ் தனது நண்பர்களுடன் மாணிக்கபுரத்திற்கு வந்து, ஒரு வேனில் நவீன்குமாரை கடத்தி சென்று கத்தியால் கீறி, சரமாரியாக தாக்கியதாகவும், நவீன்குமார் அணிந்திருந்த வெள்ளிக்காப்பு, வெள்ளி அரைஞாண் கொடி, செல்போன் ஆகியவற்றை பறித்துக்கொண்டு சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது. இதில் காயமடைந்த நவீன்குமார் நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து தா.பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து நித்திஷ் மற்றும் அவரது நண்பர்கள் அஜித், மவுலிதரன், இமானுவேல், கோகுல், கோபி, தினேஷ் ஆகிய 7 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story