அறிவு சபையை உருவாக்கிய முதல் ஆன்மிக புரட்சியாளர் வள்ளலார்


அறிவு சபையை உருவாக்கிய முதல் ஆன்மிக புரட்சியாளர் வள்ளலார்
x
தினத்தந்தி 14 Oct 2023 12:00 AM GMT (Updated: 14 Oct 2023 12:00 AM GMT)

அறிவு சபையை உருவாக்கிய முதல் ஆன்மிக புரட்சியாளர் வள்ளலார் என்று திண்டுக்கல் புத்தக திருவிழாவில் ஆ.ராசா எம்.பி. பேசினார்.

திண்டுக்கல்

புத்தக திருவிழா

திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம், திண்டுக்கல் இலக்கிய களம் சார்பில் திண்டுக்கல் டட்லி மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் கடந்த 5-ந்தேதி முதல் புத்தக திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் நேற்று வள்ளலார்-200 எனும் தலைப்பில் சிந்தனையரங்கம் நடைபெற்றது. இதற்கு இலக்கிய களத்தின் பொருளாளர் மணிவண்ணன் தலைமை தாங்கினார். ஜெயராமன் வரவேற்றார். விழாவில் ஆ.ராசா எம்.பி. கலந்து கொண்டு பேசியதாவது:-

ஆன்மிக புரட்சியாளர்

வள்ளலாரின் நெற்றியில் திருநீறு இருக்க வேண்டுமா? கூடாதா?, அவர் சைவ சமயமா? இல்லையா? ஆன்மிகத்தில் சீர்திருத்தம் செய்தாரா? இல்லையா? என பல்வேறு வடிவங்களில் வள்ளலார் பேசப்படுகிறார். மடங்கள் இருந்த மண்ணில் அறிவு சபையை உருவாக்கிய முதல் ஆன்மிக புரட்சியாளர் வள்ளலார். அனைத்திலும் புதிய மாற்றத்தை ஏற்படுத்த விரும்பினார்.

1860-ல் உலகம் புதிய பாய்ச்சலை கண்டது. அந்த காலகட்டத்தில் தான் வள்ளலார் வாழ்ந்து இருக்கிறார். அப்போது இந்தியாவில் மிகப்பெரிய பஞ்சம் ஏற்பட்டது. எனவே பசிப்பணியை போக்க வள்ளலார் விரும்பினார். மனிதன் மீது மட்டுமின்றி அனைத்து உயிர்களிடமும் கருணை காட்டுங்கள். ஆண்டவனிடம் அன்பு செலுத்துங்கள். பசிப்பிணியை போக்குங்கள் என்பதே வள்ளலாரின் ஜீவகாருண்யமாகும்.

வறுமை, அறியாமை

சைவம், வைணவம் ஆகிய சமயங்களில் இருந்தும், வேதாந்தம், சித்தாந்தம் ஆகிய மதங்களில் இருந்தும் வெளியே வாருங்கள் பேரின்ப இறைவனை காணலாம் என்றார். கல்வி மறுக்கப்பட்ட சமுதாயத்தை வேதாந்தமும், சித்தாந்தமும் உருவாக்கின. அதை சைவமும், வைணவமும் வழிமொழிந்தன. கல்வி மறுக்கப்பட்டதால் வறுமையும், அறியாமையும் சமுதாயத்தில் உருவாகின. சாதியும், மதமும் அறியாமையை கொடுத்து பசிப்பிணியில் மக்களை தள்ளியது. அதனால் சாதி, மதம், ஆச்சாரம் வேண்டாம் என்றார் வள்ளலார்.

இவ்வாறு ஆ.ராசா எம்.பி. பேசினார்.

இதில் தி.மு.க. கிழக்கு மாவட்ட செயலாளர் இ.பெ.செந்தில்குமார் எம்.எல்.ஏ., மேயர் இளமதி, துணை மேயர் ராஜப்பா, திண்டுக்கல் இலக்கிய களத்தின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த புத்தக திருவிழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) நிறைவு பெறுகிறது.


Next Story