வால்பாறையில் வீட்டின் பூட்டை உடைத்து நகை- பணம் திருட்டு-தொழிலாளி கைது
வால்பாறையில் வீட்டின் பூட்டை உடைத்து நகை- பணம் திருடிய தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
வால்பாறை
வால்பாறையில் வீட்டின் பூட்டை உடைத்து நகை- பணம் திருடிய தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
வீட்டில் திருட்டு
வால்பாறை அருகே உள்ள வில்லோணி எஸ்டேட் பகுதியைச் சேர்ந்தவர் அன்னத்தாய் (வயது 51). தேயிலை தோட்டத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவர் காலையில் வேலைக்கு செல்லும் போது வீட்டின் முன்பகுதியில் வீட்டின் சாவியை வைத்து விட்டு செல்வது வழக்கம். அதன்படி சம்பவத்தன்று வேலைக்கு சென்று விட்டு வந்து வீட்டில் பார்த்த போது பீரோவில் வைத்திருந்த 2 பவுன் நகை ரூ.1500-ஐ காணவில்லை. இவர் தினந்தோறும் சாவியை வைத்து விட்டு செல்லும் இடத்தை அறிந்து சாவியை எடுத்து வீட்டை திறந்து நகை பணம் ஆகியவற்றை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இது குறித்து அன்னத்தாய் வால்பாறை போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வில்லோணி எஸ்டேட் பகுதியில் விசாரணை மேற்கொண்டனர்.
தொழிலாளி கைது
இந்த நிலையில் சந்தேகத்தின் பேரில் வில்லோணி எஸ்டேட் பகுதியைச் சேர்ந்த தேயிலை தொழிற்சாலையில் தற்காலிக பணியாளராக பணியாற்றி வரும் சுரேஷ் (37) என்பவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளார். இதனால் அவரிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர் வீட்டின் பூட்டை உடைத்து நகை பணம் திருடியதை ஒப்புக் கொண்டதோடு, பதுக்கி வைத்திருந்த நகை பணத்தை போலீசில் ஒப்படைத்தார். எனினும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சுரேசை கைது செய்தனர்.